சென்னை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் சரியாக இருக்கும் என கமலஹாசன் கூறி உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கலந்துக் கொண்ட பொதுக் கூட்டம் முந்தா நேற்று திருச்சியில் நடைபெற்றது.   அதில் கலந்துக் கொண்டபின் சென்னைக்கு நேற்று கமல் திரும்பினார்.    அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியில், “காவிரி விவகாரத்தில் நடைபெறும் போராட்டம் வன்முறை ஆகக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.   அதே வேளையில் போராட்டத்தை அடக்க முயற்சித்தால் வன்முறை வெடிக்க வாய்ப்புகள் உள்ளது.   அவ்வாறு நிகழாமல் இரு தரப்பினரும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.   அதற்காக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதே சரியாக இருக்கும்.  இதைத் தான் நான் எனது திருச்சி பொதுக் கூட்டத்தில் தெரிவித்தேன்.    எங்கள் கட்சி இது குறித்து அடுத்த நடவடிக்கையாக என்ன செய்யும் என்பதை சொல்லிக் கொண்டிருக்க முடியாது.    அந்த நடவடிக்கையை செய்து காட்டுவோம்.

போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வதை நான் அடக்குமுறையாக பார்க்கிறேன்.   அதே நேரத்தில் நான் எந்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்தவில்லை.   ஆளும் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்களே கொச்சைப் படுத்திக் கொண்டார்கள்.   நான் அதைத்தான் சொன்னேன்” என கமலஹாசன் கூறினார்.