டில்லி:

கடந்த மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளில் கடன் ரூ. 81 ஆயிரத்து 683 கோடி தள்ளுபடி செய்யபட்டுள்ளது.. கடந்த ஆண்டு  தொகையான ரூ. 57 ஆயிரத்து 586 கோடியை விட 41 சதவீதம் அதிகரித்துள்ளது என அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடன் தள்ளுபடி என்பது கடந்த 5 ஆண்டுகளாக சீராக அதிகரித்து வருகிறது. இதே காலக்கட்டத்தில் ஒருங்கிணைந்த லாபம் சரிவை சந்தித்துள்ளது. 2012-13ம் ஆண்டில் ரூ. 27 ஆயிரத்து 231 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட போது லாபம் ரூ. 45 ஆயிரத்து 849 கோடியாக இருந்தது.

2016-17ம் ஆண்டில் ரூ. 81 ஆயிரத்து 683 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் லாபம் ரூ. 474 கோடியாக இருந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 2.46 லட்சம் கோடி ரூபாய் கடனை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளின் நஷ்டம் ரூ. 19 ஆயிரத்து 529 கோடியாக இருந்துள்ளது. எனினும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அரசு சார்பில் ரூ. 47 ஆயிரத்து 915 கோடி நிதியை அளித்தும் இந்த நிலையில் உள்ளது.

வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்துக்களின் மதிப்பு கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்த 9.2 சதவீதம் என்பதில் இருந்து மார்ச் மாதம் 9.6 சதவீதமாக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி தகவல்கள் தெரிவி க்கின்றன.

பெரிய கடனாளிகள் மீது திவால் நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு உத்தரவிடுமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து 12 செயல்படாத சொத்துக்கள் மீது திவால் நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டியது.

இந்த பட்டியலில் ஜோதி ஸ்ட்ரக்சர்ஸ், புஷன் ஸ்டீல்ஸ், மானெட் இஸ்பாத் மற்றும் எலக்ட்ரோ ஸ்டீல்ஸ், ஆம்தெக் ஆட்டோ மற்றும் இரா இன்ப்ரா இன்ஜினியரிங் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.