அரசு நடத்திய நீட் பயிற்சி மையங்கள் – ஒரு மாணாக்கர்கூட தேர்வாகாத அவலம்

சென்னை: தமிழ்நாடு அரசின் நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்த 19,355 மாணாக்கர்களில், இந்த 2019ம் ஆண்டில், ஒருவர் கூட மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

கடந்தாண்டு அரசுப் பள்ளிகளில் படித்த 3 மாணாக்கர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த 4 மாணாக்கர்களும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்றனர். ஆனால், இந்தாண்டு ஒருவரும் தேர்ச்சியடையவில்லை.

தமிழக பள்ளிக் கல்வித்துறையும், ஸ்பீட் மெடிக்கல் இன்ஸ்டிட்யூட் என்ற நிறுவனமும் இணைந்து, மாநிலம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டன.

இதன்மூலம், நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் வகையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணாக்கர்களுக்கு பயிற்சியளிப்பதுதான் திட்டம்.

மொத்தம் 19000 மாணாக்கர்களில், 2747 பேர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் அமைந்த தங்கும் வசதி கொண்ட பயிற்சி மையங்களில் பயிலும் வாய்ப்பை பெற்றனர். பிற்பட்ட வகுப்பினர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்பெற வேண்டுமெனில், அவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 474.

கடந்தாண்டை ஒப்பிடுகையில், நீட் தேர்வில் 300 மதிப்பெண்ணுக்கு மேலே எடுத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.