பாஜகவில் இணைந்தார், வடசென்னை பிரபல ரவுடி கல்வெட்டு ரவி…

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியில்,  வடசென்னையின்  பிரபல ரவுடியான  கல்வெட்டு ரவி இணைந்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2021)  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. கொரோனா காலக்கட்டத்திலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது உள்பட பல்வேறு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்ற னர்.
இந்த நிலையில், மாற்றுக்கட்சிகளை இழுக்கும் படலமும் அரசியல் கட்சிகள் இடையே தீவிரமடைந்து வருகிறது. இதுபோன்ற செயல்களில் முதலிடத்தில் உள்ளது பாரதியஜனதா கட்சி. ஏற்கனவே திமுக, அதிமுக உள்பட பல கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு வலைவீசி, ஆசைகாட்டி,  பாஜகவில் இணைத்து வருகிறது.
சமீபத்தில் திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிலையில், தற்போது, வடசென்னையின்  பிரபல ரவுடியான, கல்வெட்டு ரவி என்பவர் இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
கல்வெட்டு ரவுடி மீது,  கேளம்பாக்கம் கன்னியப்பன் கொலை, தண்டையார் பேட்டை வீனஸ் படுகொலை, ராயபுரம் பிரான்சிஸ் படுகொலை, பொக்கை ரவி கொலை, வண்ணாரப்பேட்டை சண்முகம் படுகொலை என மொத்தம் 6 படுகொலைகள் உள்பட 35 வழக்குகள் உள்ளது. இதுவரை , 6 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்றவர்.  வடசென்னையின்  பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாஜகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலின்போது எதிர்க்கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், ரவுடிகளை தமிழக பாஜக சேர்த்து வருவதாகவும்,  தமிழக பாஜக ரவுடிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.