கொரோனா பீதி – எல்லைகளை மூடி உஷார் நிலையில் வடகிழக்கு மாநிலங்கள்!

கவுகாத்தி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வெளிநாட்டவர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், அண்டை நாடுகளுடனான எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.

மணிப்பூர் அரசு, மியான்மர் எல்லையை காலவரையின்றி மூடியுள்ளது. அந்த வழியாக வெளிநாட்டவர் உள்ளே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மிசோரம் மாநில அரசும் மியான்மர் மற்றும் வங்கதேச எல்லைகளை மூடியுள்ளதுடன், வெளிநாட்டினர் தன் எல்லைக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அருணாச்சலப் பிரதேச அரசும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக வழங்கப்படும் அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை அனுமதி வழங்கப்படாது என்று அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை ஒட்டியப் பகுதிகளுக்கு செல்ல வேண்டுமெனில், இந்த அனுமதியைப் பெற வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கிம் அரசும், பூடான் அரசும் வெளிநாட்டவர்கள் வருவதற்கு தடை விதித்துள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.