மூட நம்பிக்கை : வட இந்தியாவில் தீபாவளிக்கு பலியிடப்படும் ஆந்தைகள்

டில்லி

மூட நம்பிக்கையால் வட இந்திய மாநிலங்களில் தீபாவளி சமயத்தில் பல ஆந்தைகள் பலியிடப்படுவது தொடர்ந்து வருகிறது.

மூட நம்பிக்கைகள் என்பது நாடெங்கும் அதிக அளவில் உள்ளன. அத்தகைய மூட நம்பிக்கைகளால் யாருக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாத வரை அதை மக்கள் சகித்துக் கொள்கிறார்கள். ஆனால் தீங்கு ஏற்படும் போது மக்கள் அதை எதிர்த்து போராடி வருகிறார்கள். பல நேரங்களில் இவ்வாறான நம்பிக்கைக்கு நிஜ வாழ்விலும் அல்லது புராணக் கதைகளிலும் எவ்வித ஆதாரமும் இல்லாமல் உள்ளது.

வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை மூன்று நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. தீபாவளி அன்று லட்சுமி தேவிக்கு பூஜை செய்யும் போது லட்சுமி நேரடியாக வீட்டுக்கு வருவதாக வட இந்தியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இது குறித்து யாரும் எவ்வித ஆட்சேபமும் தெரிவிப்பதில்லை. ஆனால் அடுத்து நடப்பதை பலரும் எதிர்க்கின்றனர்.

லட்சுமி தேவி ஆந்தை வாகனத்தில் ஏறி ஒவ்வொரு வீட்டுக்கும் பூஜைய ஏற்றுக் கொள்ள வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு வரும் லட்சுமி தேவி பூஜை முடிந்ததும் வீட்டை விட்டு திரும்பிச் செல்லாமல் இருக்க ஆந்தைகளை பலியிட்டு விடுகின்றனர். ஆந்தை இல்லாததால் லட்சுமி தேவி திரும்ப செல்ல முடியாமல் தங்கள் வீட்டிலேயே தங்கி விடுவாள் என அவர்கள் காரணமும் தெரிவிக்கின்றனர்.

இதனால் தசரா முடிந்ததில் இருந்தே ஆந்தைகளை தேடிப் பிடித்து வந்து தீபாவளி சமயத்தில் பூஜை முடிந்ததும் பலியிட்டு வருகின்றனர். எத்தனை ஆந்தைகள் இவ்வாறு பலியிடப்படுகின்றன என்பது குறித்து சரியான விவரங்கள் இல்லாத போதிலும் இந்த ஆந்தைகள் பலி தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் பாய்ஜு ராஜ், “ஆந்தைகளை பிடித்து மாந்திரிகர்கள் சூனியம் வைத்து வருகின்றனர். அதற்காக பிடிக்க்ப்படும் ஆந்தைகளை பல முறை நாங்கள் மீட்டுள்ளோம். ஆனால் லட்சுமி தேவியை தங்க வைக்க ஆந்தையை பலி கொடுப்பது ஆன்மிகப்படியும் தவறானது. தனது வாகனமான ஆந்தையை பலி இட்டவர்களுக்கு லட்சுமி தேவி எவ்வாறு செல்வத்தை அளிப்பாள் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்” என கூறி உள்ளார்.