வடகொரியா அதிபர் கிம் ஜாங் சீனாவுக்கு ரகசிய பயணம்

பெய்ஜிங்:

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முதல் முறையாக நேற்று சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2011-ம் ஆண்டு வட கொரியா அதிபராக பதவி ஏற்றது முதல் அவர் எந்த வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொண்டதில்லை. தற்போது முதல் முறையாக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

சீனாவில் அவர் சிறப்பு ரெயில் மூலம் வடகிழக்கு எல்லை நகரமான டாண்டங்க்கு சென்றதாக ஜப்பானின் க்யோடா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பெய்ஜிங்கில் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு எழுந்துள்ளது. முன்னதாக 2011ம் ஆண்வு வடகொரியா அதிபரின் தந்தை 2ம் கிம் ஜாங் இறப்பதற்கு முன்பு சீனா வந்திருந்தார்.

அந்த ரெயில் வடகொரியா அதிபருடன், அந்நாட்டு அதிகாரிகளும் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் இதை மறுத்துள்ளார். தற்போது வரை எந்த தகவலும் இல்லை. தகவல் உறுதிபடுத்தப்பட்டால் தெரிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக வடகொரியாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. மேலும், தற்போது சீனாவுடன் வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளை அமெரிக்கா கிளப்பியுள்ளது. இந்நிலையில் வடகொரியா அதிபரின் சீனா பயணம் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது. சீன அதிபர் மற்றும் பிரதமரை வடகொரியா அதிபர் சந்திக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த தகவல் உறுதிபடுத்த முடியவில்லை என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.