பொதுமக்களிடையே வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் : புதிய புகைப்படங்கள்

பியாங்க்ஜாங்

வலைக்கிடமாக உள்ளதாகச் சொல்லப்பட்ட வட கொரிய அதிபர் பொதுமக்களிடையே தோன்றியதாகப் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

வட கொரிய அதிபர் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதிக்குப் பிறகு பொதுமக்களிடையே தோற்றம் அளிக்காமல் இருந்தார்.  இதனால் அவருடைய உடல்நிலை குறித்துப் பல செய்திகள் வெளியாகின.  அதற்கேற்றாற்போல் அவருடைய தாத்தாவும் வட கொரிய நாட்டின் அமைப்பாளருமான கிம் இல் சங் பிறந்த நாள் விழாவில் அவர் கலந்துக் கொள்ளவில்லை.

இது மேலும் பல ஊகங்களுக்கு இடம் அளித்தது.

அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்ததாகவும் அவர் உடல் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அமெரிக்க செய்தி ஊடகத்தில் தகவல்கள் வெளியாகியது.   ஆனால் இவை அனைத்தும் வதந்திகளே எனவும் அவர் உடல்நிலையில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனத் தென் கொரிய அரசின் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் கடந்த வாரம் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று மே தினத்தை முன்னிட்டு கிம் ஜாங் உன் பொதுமக்களிடையே தோன்றி ஒரு உரத் தொழிற்சாலையைத் திறந்து வைத்ததாக தகவல்களும் புகைப்படங்களும் வெளியாகின.   அவரைக் கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்ததாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    அவர் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்து உற்பத்தி குறித்து விசாரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.