பியாங்யாங்: அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், ரஷ்யாவுடனான புதிய உறவை துவக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான தனது முதல் சந்திப்பை அவர் விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தனது அணு ஆயுதங்களை கையிருப்பு வைத்துக்கொள்ளும் அதேவேளையில், வடகொரியாவின் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார அழுத்தங்களையும் குறைக்க வேண்டுமென்ற நிலையில், ரஷ்யாவுடனான உறவு வடகொரியாவுக்கு, இந்த சூழலில் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

ரஷ்யா மற்றும் வடகொரிய அதிபர்களின் சந்திப்பு விரைவில் நடைபெறும் என்று தெரிவித்துள்ள கிரெம்ளின் வட்டாரங்கள், இதர விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டது.

அதேசமயம், வடகொரியா – ரஷ்யா ஆகிய நாடுகளிடையே ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்நாடு தனது முக்கியமான தூதரான ஸ்டீஃபன் பைகுனை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்துள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றன.

– மதுரை மாயாண்டி