முதல்வர் பாதுகாப்பில் குளறுபடி : விளக்கம் கேட்டு வடக்கு மண்டல ஐஜி நோட்டிஸ்

காட்பாடி

காட்பாடியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் நடந்த குளறுபடி குறித்து காவல்துறையினருக்கு வடக்கு மண்டல ஐஜி நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.

இந்த மாதம் 25 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி கோவிலில் தரிசனம் செய்தார்.   அதன் பிறகு காட்பாடி வழியாக அவர் காரில் சேலம் சென்றார்.  காட்பாடி எல்லையில் அவருக்கு அதிமுகவினர் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.    அதை ஒட்டி ஒரு சிறிய மேடை ஒன்றும் அவர் பேச அமைக்கப்பட்டிருந்தது.

அதிமுக தொண்டர்கள் கூட்ட நெரிசலால் முதல்வர் வாகனம் மேடை அருகே செல்ல முடியவில்லை.   எனவே அவர் காரில் இருந்து இறங்கி நடக்கத் தொடங்கினார்.    தொண்டர்கள் அவரை அப்போது சூழ்ந்ததால் தள்ளுமுள்ளு உண்டானது.   அதனால் முதல்வர் காருக்கு திரும்பி சேலம் சென்று விட்டார்.

இதற்கு காவல்துறையின் பாதுகாப்பு குளறுபடியே காரணம் என கூறப்பட்டது.    காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், “முதல்வரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியால் இந்த தள்ளுமுள்ளு சம்பவம் நிகழ்ந்துள்ளது.  இது குறித்து விளக்கம் கேட்டு பாதுகாப்பு பனியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.” என தெரிவித்துள்ளார்.