ஓரிரு நாளில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

சென்னை:

மிழகத்தில் இன்னும் ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமைழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வடமேற்கு வங்க கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை காலம் முடிந்துவிட்டது. அதேபோல் அரபிக்கடல் பகுதியிலும் தென்மேற்கு பருவமழை முடிவடைந்தது. படிப்படியாக மற்ற இடங்களிலும் தென்மேற்கு பருவமழை  முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாளில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வரும் 26ம் தேதிக்குப் பிறகு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது,

வடகிழக்குப் பருவமழை மூலமே தமிழகம் அதிக மழையைப் பெற்று வருகிறது. தமிழகம், கடலோர ஆந்திரம், ராயலசீமா, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு வடகிழக்குப் பருவமழை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

வழக்கமாக அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் பருவ மழை டிசம்பர் இறுதி வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு இன்னும் ஒரிரு நாளில் வடகிழக்குப் பருவக்காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பருவமழை பெய்யும் சூழ்நிலைகள் உருவாகும். அதைத் தொடர்ந்து வரும்  26ம் தேதியிலிருந்து 29ம் தேதிக்குள் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் சராசரியாக 440 மி.மீ. மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாகவும் கூறி உள்ளார்.

மேலும், வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.  சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

You may have missed