வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்று தொடங்குகிறது… 4 மாவட்டங்களில் கனமழை…

சென்னை: தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும், 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது. அதுபோல, இன்று பருவமழை தொடங்குகிறது என தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகி விட்டது, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், இன்று வட கிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும், சாதகமான சூழல் நிலவுகிறது என்றும்  தெரிவித்து உள்ளது. அத்துடன்,  நவம்பர் 2-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலை இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, சென்னை உள்பட பல மாவட்டங்களில் லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன், ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.