சென்னை:

மிழகத்தில்  சென்னை உள்பட 20 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை, அளவை விட குறைவாக பெய்துள்ளதாகவும்,  சென்னையில் 13 சதவிகிதம் குறைவாக மெழை பொழிந்துள்ளது என்றும் சென்னை  வானிலை ஆய்வு மைய இயக்குனர்  பாலச்சந்திரன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில்,  இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல, தமிழகஅரசும், மழை பாதிப்புகளை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 11 ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமனம் செய்தது.

இந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரையிலான கால கட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கமாக 44 சென்டி மீட்டர் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

ஆனால், இந்த ஆண்டும் வழக்கம்போல வடகிழக்கு பருவமழை தமிழகத்தை ஏமாற்றியே உள்ளது. தென்மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. தற்போது மார்கழி குளிர் வாட்டத்தொடங்கி உள்ளது. பனிபொழிவும் ஏற்பட்டள்ளது.  இதன் காரணமாக வடகிழக்கு முடியும் தருவாய்க்கு வந்துள்ளது புலப்படுகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச் சந்திரன், வடகிழக்கு பருவமழையானது,  கடந்த நவம்பர் 24-ந் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 30 செ.மீ. மட்டுமே மழை பெய்திருந்தது. இதனால் வழக்கமான மழை அளவை எட்டுமா என்ற சந்தேகம் இருந்தது. தற்போது வழக்கமான மழை அளவான 44 செ.மீ. மழை அளவை எட்டி உள்ளது. இதற்கு இந்திய கடல் பகுதியின் சாதகமான இரு துருவ நிகழ்வும் ஒரு காரணம் ஆகும்.

பருவ மழை நிறைவடைய இன்னும் 10 நாட்கள் உள்ளன. இனி வரும் நாட்களில் கிடைக்கும் மழை அனைத்தும் கூடுதல் மழை தான். சில மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமாகவும், சில மாவட்டங்களில் குறைவாகவும் மழை பெய்வது வழக்கமான ஒன்றுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 15-ந் தேதி நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் 78 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 74 சதவீதம் அதிகம் ஆகும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 74 செ.மீ. மழை பெய்துள்ளது. இது 60 சதவீதம் அதிகமாகும். நெல்லை மாவட்டத்தில் 65 செ.மீ. மழை பெய்துள்ளது. இது 52 சதவீதம் அதிகமாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் (51 செ.மீ.) 39 சதவீதமும், தூத்துக்குடி மாவட்டத்தில் (53 செ.மீ.) 36 சதவீதமும், கோவை மாவட்டத்தில் (44 செ.மீ) 35 சதவீதமும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது.

அதே நேரம் புதுச்சேரியில் (57 செ.மீ.) வழக்கத்தை விட 29 சதவீதம் குறைவாகவும், வேலூர் (34 செ.மீ.), பெரம்பலூர் (32 செ.மீ.) மாவட்டங்களில் தலா 24 சதவீதம் குறைவாகவும் மழை பெய்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் (30 செ.மீ) 21 சதவீதம் குறைவாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் (34 செ.மீ.) 20 சதவீதமும், சென்னையில் (60 செ.மீ.) 13 சதவீதம் குறைவாகவும் மழை கிடைத்துள்ளது. மொத்தத்தில் சுமார் 20 மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவாக மழை பெய்துள்ளது.

ஏற்கனவே கடந்த (2018) வடகிழக்கு பருவமழை சராசரியை விட 24 சதவிகிதம் குறைவாக பெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.