வடகிழக்கு பருவ மழை தொடங்கியது: மேலும் 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை

--

சென்னை:

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக தற்போது பெய்துவரும் மழை மேலும்  2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

தென்மேற்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி முடிவடைந்த நிலையில், வடகிழக்கு பருவமனை இன்று தொடங்கும் நாளை தொடங்கும் என மாறி மாறி அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றும் இன்றும் மழை  தொடர்ந்து வரும் நிலையில், இன்று  வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் முதல் தெற்கு ஆந்திராவின் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதி வரை காற்றழுத்தம் நிலவி வருவதாலும்,  இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாலும், தென் தமிழகத்தில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தாலும் தற்போது மழை பெய்து வருவதாகவும், இதையடுத்து வடகிழக்கு பருவ மழை இன்று தொடங்கியதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். சென்னையில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்யும். ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ள தாகவும் கூறப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக புழலில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்வதால் கடந்த 3 நாட்களாக பருவ நிலை மாறி இதமான குளிர் நிலவுகிறது.

இதற்கிடையே இலங்கை அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிரம் அடைந்து புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் தீபாவளியன்று பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையால் அடுத்த 2 நாட்களுக்கு 3-ந்தேதி வரை சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் சில இடங் களில் மழை பெய்யும்.

இலங்கைக்கு கிழக்கே தற்போது குறைந்த காற்றழுத்தம் நிலை கொண்டுள்ளது. அது வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரும் போது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு  உள்ளதாகவும், வரும் 6-ந்தேதி தீபாவளி பண்டிகையன்று புயல் காற்றுடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தமிழகத்தில் பரவலாக மழை நீடிக்கும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.