வழக்கத்தைவிட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 24% குறைவு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை:

ழக்கத்தைவிட இந்த ஆண்டு தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை 24% குறைவாக பெய்து உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் போதிய அளவு மழை பெய்யவில்லை. தற்போது, வடகிழக்கு பருவமழை காலம் முடியும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்தில் போதிய அளவு  பெய்யாதது குறித்த காரணத்தை விளக்கினார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக தெரிவித்தவர்,  தர்மபுரி மாவட்டத்தில்  மழையின் அளவு 57 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இது தமிழகத்திலேயே அதிகம் என்றார். அதுபோல  நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட 11 சதவீதம் மழை குறைவாக  மழை பெய்துள்ளது என்றவர்,  5 மாவட்டங்களில் 30 முதல் 40 சதவீதம் வரை குறைவான மழை பெய்துள்ளதாகவும்,  4 மாவட்டங்களில் 20 முதல் 30 சதவீதம் வரை குறைவாகவும்,   15 மாவட்டங்களில் 1 முதல் 19 சதவீதம் வரை குறைவாக பெய்துள்ளது. பொதுவாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை மிகவும் குறைந்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை இயல்பைவிட 55 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வழக்கமாக 79 செ.மீ. மழை பதிவாகும் ஆனால் இந்த ஆண்டு 35 செ.மீ. மழையே பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவ மழை காலத்தில் 4 புயல்கள் உருவாகின. அவற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்ததால் மழை இல்லை என்றும் கூறினார்.

தமிழகத்தை சூறையாடிய சென்ற கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது. மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்றுவிட்டதால் மழை இல்லை. பொதுவாக ‘எல்நினோ’ உருவானால் தான் மழை பெய்யும். அது உருவாகாமல் தள்ளி போய்விட்டதும் வானிலை நிகழ்வுகள் சாதகம் இல்லாததும், வடகிழக்கு பருவமழை குறைவுக்கு காரணமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You may have missed