அக்டோபர் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வரும் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே அக்டோபர் 3ம் வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: நடப்பாண்டில் வட தமிழகத்தில் இயல்பை ஒட்டியே மழை இருக்கும். தென் தமிழகத்தில் இயல்பை விட குறைவாக மழை இருக்கும். வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் முடிந்ததும் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 2 தினங்களுக்கு வட தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.