டில்லி : நார்வே நாடு அமைத்துள்ள பசுமை இல்லம் அடுத்த மாதம் திறப்பு

டில்லி

நார்வே நாட்டு தூதரக கட்டிடம் பசுமை இல்லமாக அமைக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் சுற்றுச் சூழல் மாசு அடைவது அதிகரித்து வருகிறது. அதை குறைக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகின்றன. இதற்கு மீண்டும் உபயோகப் படுத்தக் கூடிய எரிசக்தி, கழிவு நீர் மறு சுழற்சி, பசுமை மயமாக்கள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் குறிப்பாக டில்லி நகரில் மாசடைவது அதிகம் உள்ளது.

இந்நிலையில் நார்வே நாடு தனது தூதரகக் கட்டிடத்தை பசுமை இல்லமாக அமைத்துள்ளது. சுமார் 12000 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இல்லத்தில் 95% வரை டில்லியில் கிடைக்கும் பொருட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதன் மூலம் இங்கிலாந்து நாட்டில் இருந்து பொருட்கள் எடுத்து வருவது தவிர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்டிடத்தில் மிகப்பெரிய புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புல்வெளிக்கான நீர் கழிவு நீரை மறு சுழற்சி செய்வதன் மூலம் கிடைக்கிறது. இதனால் ஆண்டுக்கு சுமார் 1,24,000 லிட்டர் நீர் மிச்சமாகிறது. அத்துடன் காகிதம் உள்ளிட்ட பல பொருட்கள் மறு சுழற்சி செய்யப்பட்டு இந்த தூதரகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 7 மாதங்களில் நார்வே தூதரகம் கடந்த 7 மாதங்களில் சுமார் ரூ. 18000 வரை மிச்சம் செய்துள்ளது.

அத்துடன் சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் மறு சுழற்சி செய்யப்படும் நீரைக் கொண்டு கட்டிடம் குளிரூட்டப்படுகிறது. அதனால் ஏர் கண்டிஷனுக்கான மின்சரக் கட்டணம் பெருமளவில் குறைந்துள்ளது. அத்துடன் கட்டிடத்துக்கான மின்சார தேவைக்காக சூரிய ஒளி மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தினம் 200 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

கடந்த 1950 களில் கட்டப்பட்டிருந்த இந்த கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டு தற்போது இரண்டரை வருடங்கலில் பசுமை இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை அடுத்த மாதம் நார்வே நாட்டின் பிரதமர் எர்னா சொயிபர்க் திறந்து வைக்க உள்ளார்.