காஞ்சிபுரத்தில் பெரியார் சிலையின் மூக்கு உடைப்பு! பரபரப்பு.. .

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே  பெரியார் சிலையின் மூக்கு, கை உடைக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ரஜினி துக்ளக் விழாவில் பெரியார் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி திகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. வழக்குகளும் பாய்ந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், காஞ்சிபுரம்  மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள களியப்பேட்டை கிராமத்தில் இருந்த பெரியார் சிலை, மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு உள்ளது.

20 வருடத்திற்கு முன்னாள் அமைக்கப்பட்ட அந்த சிலையின் மூக்கு, கை போன்ற பகுதிகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளது. இதுகுறித்து இன்று காலை அறிந்த கிராம மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்த செய்தி வைரலான நிலையில், ஏராளமானோர் பகுதியில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக  அங்கு  பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து கூறிய அந்த பகுதி மக்கள்,  பெரியார் சிலையை வெளி நபர்கள்தான் சேதப்படுத்தி இருக்க வாயப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may have missed