டெல்லி:

பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும்  ரூ.1லட்சத்து 86ஆயிரத்து 650 கோடிதான்… என்று முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ரூ.20லட்சம் கோடிக்களான திட்டங்களை நிதி அமைச்சர் அறிவிப்பதார் என பிரதமர் மோடி கடந்த வாரம் மக்களுக்கு உரையாற்றியபோது தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தனது அமைச்சரவை படை பரிவாரங்களுடன் கடந்த 5 நாட்களாக தினசரி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார்.

அதன்படி, 5 கட்டங்களாக அறிவித்த சிறப்பு திட்டங்கள்  மொத்தம் ரூ.11,02,650 கோடி என்றும்,  ஏற்கனவே ரிசர்வ் வங்கி அளித்துள்ள சலுகை திட்டங்களின் மதிப்பு ரூ.8,01,603 கோடி எனவும் மொத்த மதிப்பு ரூ. 20.97 லட்சம் எனவும் நிதி அமைச்சர்  தெரிவித்தார்.

ஆனால், அவரது அறிவிப்பு தவறு என முன்னாள் மத்திய அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனனர்.

இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டிவிட்டில்,

பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான்

ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்.

என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா வெளியிட்டுள்ள தகவலில்  பாஜக அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி சலுகைகளின் உண்மை மதிப்பு ரூ.3.22 லட்சம் கோடி மட்டுமே, இதுகுறித்து என்னுடன் விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.