மிசாவையே கண்டவர்கள் நாங்கள்; 2ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அஞ்சமாட்டோம்! ஸ்டாலின்

சென்னை:

மிசாவையே கண்டவர்கள் நாங்கள்; ”இரண்டு வழக்குகள் மட்டுமல்ல – இன்னும் இரண்டாயிரம் வழக்குகள் போட்டாலும் கவலையில்லை” எதற்கும் அஞ்ச மாட்டோம் என்று திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சை தொகுதி எம்.பி.யுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இல்லத் திருமண விழா தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. ‘ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்த இந்த திருமணத்தில்,  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு, சசிகலாவின் தம்பி திவாகரன், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

அன்புக்குரிய பழனிமாணிக்கம் அவர்களது அருமைச் சகோதரர் ராஜ்குமார் – சர்மிளா தம்பதியரின் அன்பு மகன் டாக்டர் ஸ்ரீராம் சுப்பையா அவர்களுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திரு. ராமச்சந்திரன் – கீதா தம்பதியின் அன்பு மகள் டாக்டர் சாருஹாசினி அவர்களுக்கும், நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த இனியதொரு மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று விழாவை நடத்திவைத்து, மணமக்களை வாழ்த்தும் சிறப்பான வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். வாய்ப்பு தந்த அனைவருக்கும் நான் நன்றி சொல்லவும் விரும்புகிறேன். கடந்த வாரம்தான் தஞ்சைக்கு வந்தேன். தஞ்சைக்கு வருவதென்றாலே எனக்குள் ஒரு பூரிப்பு வந்துவிடும். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட பூரிப்போடு, மகிழ்ச்சியோடு, இந்த மணவிழா நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதற்காக வந்திருக்கிறேன்.

பழனிமாணிக்கமும், அவருடைய சகோதரர் ராஜ்குமாரும், இந்த இயக்கத்திற்கு எப்படி பக்க பலமாக, துணையாக, தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்; இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு எப்படி பக்கபலமாக இருக்கிறார்கள் என்பது குறித்தெல்லாம் உங்களிடத்தில் அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது கிராமத்தில் கூறப்படும் பழமொழியைப் போல, ‘கொல்லன் தெருவில் ஊசி விற்ற’ கதை ஆகி விடும். அவர்களைப் பற்றி இங்குள்ள நீங்கள் அனைவருமே அதிகம் அறிந்தவர்கள், புரிந்தவர்கள்.

சகோதரர் பழனிமாணிக்கம் அழுத்தமானவர். எதையும் அழுத்தமாக, ஆணித்தரமாக எடுத்துச் சொல்லக்கூடிய வர்.. யாராவது கோபித்துக் கொள்வார்களோ என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படமாட்டார். மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லி விடுவார். அது செயற்குழுவாக இருந்தாலும், பொதுக்குழுவாக இருந்தாலும் – ஏன் தலைவரிடத்தில் கூட அவர் பேசும்போது பக்கத்தில் இருந்து நான் பார்த்திருக்கிறேன் – மனதில் பட்டதை வெளிப்படையாகவே கூறிவிடுவார். இப்போது என்னிடத்திலும் அப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார். அந்த ஆற்றல் அவருக்கு உண்டு. மறைந்த முரசொலி மாறனுடைய வளர்ப்பு அவர். முரசொலி மாறன் வெளிப்படை யாக எதையும் பேசிவிடுவார். மாறனுடைய வளர்ப்பின் காரணமாக, பழனிமாணிக்கமும் அப்படித்தான் பேசுவார். அவரது தம்பி ராஜ்குமாரிடம் நான் அதிகம் பழகியதில்லை. இன்றுதான் அவர் பேசுவதையே மேடையில் அமர்ந்து கேட்டேன். ‘அப்பாவுக்கு தப்பாமல் பிள்ளை பிறந்திருக்கிறது’ என்று சொல்வார்கள். ஆனால் ‘அண்ணணுக்கு தப்பாமல் ஒரு தம்பி’யும் இருக்கிறார் என்பதை இன்றுதான் பார்த்தேன்.

பழனிமாணிக்கம் என்னதான் அழுத்தமானவராக இருந்தாலும் இயக்கத்திற்குப் பயன்படும் வகையில் அவருடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அதில் நமக்கு பெருமை; மகிழ்ச்சி. அது மட்டுமின்றி அவருக்கு பரந்த மனப்பான்மையும் இருப்பதைப் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். அதற்கு உதாரணமாக ஒன்றைக் கூறலாம். கடந்த முறை சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது ராஜ்குமாருக்கு ஒரத்தநாடு தொகுதியை ஒதுக்கிக் கொடுத்தோம். பொதுவாக கேட்ட தொகுதியைக் கொடுக்கவில்லை என்றால், கோபித்துக்கொண்டு செல்வார்கள். ஆனால் தொகுதி வேண்டாம் என்று சொன்னவர் ராஜ்குமார் ஒருவர்தான். வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத் தொகுதியின் வெற்றிக்கு எந்த அளவுக்கு அவர்கள் துணை நின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. ஒரத்தநாடு தொகுதியில் ராமச்சந்திரன் எம்எல்ஏவாக இருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் ராஜ்குமார்தான். அவர் வேண்டாம் என்று சொன்னதால் ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆக முடிந்தது. அத்தகைய பரந்த மனப்பான்மையும் அவர்களுக்கு உண்டு என்பதை, நீங்கள் நன்றாக அறிவீர்கள். ஒரு திராவிட இயக்க குடும்பத்தில், திராவிடப் பற்றோடு இருக்கும் குடும்பத்தில் நடைபெறும் மணவிழா இதுவாகும்.

இங்கு சகோதரர் திவாகரன் பேசியதைக் கேட்டு நீங்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியைத் தெரிவித்தீர்கள். அதற்குப் பிறகு பேசிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட அதை வலியுறுத்தி குறிப்பிட்டுச் சொன்னார்கள். நேரு பேசும்போது சொன்னார்; இப்படித்தான் புதுக்கோட்டையில் பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த அரசகுமார் பேசினார். பேசிவிட்டு ஒரு வாரத்தில் திமுகவில் வந்து சேர்ந்துவிட்டார்.

இன்று திவாகர் பேசி உள்ளார். அவர் எங்கே போகிறார். எங்கே வருகிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அது அவர் எடுக்க வேண்டிய முடிவு. ஆனால், அவர் பேசும் போது, ‘கட்சி பாகுபாடின்றி, அதிமுக, திமுக என்று பாராமல் தமிழ்நாட்டைக் காப்பாற்ற தமிழன் என்ற உணர்வைப் பெற்றாக வேண்டும்’ என்று குறிப்பிட்டார். அதைத்தான் நான் இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் தற்போது ஓர் ஆட்சி நடைபெறுகிறது. அதை ஆட்சி என்று சொல்வதை விட காட்சி என்றுதான் சொல்ல வேண்டும். அதை மாற்றுவதற்கான தேர்தலை விரைவில் நாம் சந்திக்க இருக்கிறோம். 2021ல் தேர்தல். சரியாக 17 மாதங்கள்தான் இடையில் உள்ளன. இடையில் இருக்கும் இந்தக் காலக்கட்டத்தை நாம் எப்படி பயன்படுத்தப் போகிறோம்? நாட்டில் என்ன நிலைமை? உள்ளாட்சித் தேர்தலில் நாம் சற்றே அலட்சியமாக இருந்து விட்டதாகக்கூட திவாகரன் குறிப்பிட்டுச் சொன்னார். அதனால் ஆங்காங்கே சில தவறுகள், முறைகேடுகள் நடந்து தி.மு.கழகத்தின் வெற்றி தடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஆனால், அலட்சியமாக இல்லாமல் கவனமாக இருந்ததால் தான் இந்த அளவுக்கேனும் வெற்றி பெற்றிருக்கி றோம் என்பதைத் திவாகரனுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இல்லையென்றால் இன்னும் மோசமாக போய் இருக்கும். அதுதான் உண்மை. விழிப்போடு நம்முடைய தோழர்கள் இருந்த காரணத்தால்தான், சில இடங்களில் அட்டூழியங்களைத் தடுத்து 65 சதவீதம் பெற்றியைப் பெற்றுள்ளோம். முறையாக நடந்திருந்தால், எண்ணி முடித்ததை முறையாக அறிவித்திருந்தால் கூட, 85 சதவீதம், 90 சதவீதம் நாம்தான் வெற்றி பெற்றிருப்போம். அதனால்தான் தொடர்ந்து நீதிமன்றத்தை நாம் நாடினோம். உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றங்களை நாடினோம். நீதிமன்றம் சென்றுதான் இந்த அளவுக்கு வெற்றியைப் பெற்றிருக்கிறோம் என்பது உண்மை. இல்லையென்றால் இன்னும் மோசமான நிலையிலே அநியாயங்கள், அக்கிரமங்கள் செய்து நம்முடைய இந்த வெற்றியைக் கூட தடுத்திருப்பார்கள்.

ஆனால், மிக விழிப்புடன் அதை நாம் தடுத்து நிறுத்தி வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி என்பது, வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. அதனால்தான் இன்று ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள், விதவிதமான பிரச்சாரங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

2 நாட்களுக்கு முன்னர் என் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 வழக்குகள் என்ன, இரண்டா யிரம் வழக்குகள் போட்டாலும், அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம். தி.மு.கழகம் பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்.

என் மீது வழக்கு போடும் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவ படிப்புக் கனவை, நிறைவேற விடாமல் தடுக்கும் ‘நீட்’ தேர்வைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இந்த ஆட்சிக்கு இருக்கிறதா? சட்டமன்றத்தில் 2 முறை தீர்மானம் போட்டோம். எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருமனதாக தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். அது என்னவாயிற்று என இதுவரை இந்த அரசு கேட்டிருக்கிறதா? இல்லை. ‘நீட்’ தேர்வே தமிழகத்திற்குள் வராது என சட்டமன்றத்தில் சொன்னார்கள். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் பேசினார்கள். ஆனால் தடுத்து நிறுத்தினார்களா? என்றால் இல்லை.

தஞ்சை டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் பல கொடுமைகளைச் சந்தித்து வருகிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 2 நாட்களுக்கு முன்னர் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். விவசாயிகள் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் சொன்னார்கள். ஆனால் தற்போது என்ன நிலை? சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் அனுமதி கேட்கவேண்டிய அவசியம் இல்லை என பட்டவர்த்தனமாக மத்திய அமைச்சர் பேசுகிறார். அதை இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் இன்று நாடு போய்க்கொண்டிருக்கிறது. இதை டெல்டா பகுதியைச் சேர்ந்த மக்கள் நன்கு உணர்ந்து பார்த்து, உங்களுக்காக உழைக்கும், உங்களுக்காக பாடுபடும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்றும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

திராவிட இயக்கத்தின் குடும்பத்தில், இன்றைக்கு நம்முன் மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள், பழனிமாணிக்கமும், அவருடைய சகோதரர் ராஜ்குமாரும் எத்தகைய உறுதியுடன் கழகத்திற்குப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்களோ, அதே வழி நின்று, இந்த இயக்கத்திற்குப் பயன்படவேண்டும் என்று அன்போடு கேட்டு, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்து சொன்னதைப் போல, வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய் விளங்க வேண்டும் என வாழ்த்துகிறேன். மணமக்கள் வாழ்க வாழ்க என வாழ்த்தி விடை பெறுகிறேன் வணக்கம்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

கார்ட்டூன் கேலரி