சென்னை:

டந்த மாதம் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தொழிற் படிப்புகளில் சேர மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இதற்காக அரசு மற்றும் தனியார்  பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  AICTE-இன் அங்கீகார நீட்டிப்பு பெறாத எந்த ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் 37 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இங்கெல்லாம் தற்போது விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், முதலாமாண்டும், பிளஸ் 2 முடித்தவர்கள், நேரடி, இரண்டாமாண் டும் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஏராளமானோர் தொழிற்படிப்புக்கு விண்ணபிப்தது வருகின்றனர்.

இந்த நிலையில் பல தனியார்  பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதி, போதுமான ஆசிரியர்கள்  இல்லாத காரணத்தால் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ளது.

இந்தநிலையில் ஏஐசிடிஇ அங்கீகாரம் நீட்டிப்பு பெறாத எந்தவொரு பாலிடெக்னிக் கல்லூரியும் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எச்சரிக்கை:

மாணவ மாணவிகளே, பெற்றோர்களே….   மேற்படிப்புக்காக விண்ணப்பம் வாங்குவதற்கு முன்பு, நீங்கள் படிக்க விரும்பும் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் 2019-2020ம் ஆண்டுக்கான அங்கீகாரம் பெற்றுள்ளதான என்பதை அறிந்து, விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து அனுப்புங்கள்…