கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ளாதது ஏன்?: கமல் விளக்கம்

ன்று நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ளாததற்கான காரணத்தை கமல்ஹாசன் விளக்கியுள்ளார்.

தி.மு.க. முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த  கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்படுகிறது. இந்நிகழ்வில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், ஆம்ஆத்மி தலைவரும் டில்லி முதல்வருமான கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட நாடுமுழுதுமுள்ள முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள்.

நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் “கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் கலந்துகொள்வார். தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சி இணைவது இதன் மூலம் உறுதியாகும்” என்று ஒரு தகவல் நேற்றிலிருந்து பரவியது.

இதற்கு மறுப்பு தெரிவித்து  ட்விட் செய்த கமல், கூட்டணி குறித்து பரவும் செய்தி வதந்திதான் என்று தெரிவித்தார்.

ஆனாலும் இன்று நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அவர் கலந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் அவர் மதுரை புறப்பட்டுச் செல்கிறார். இது குறித்து விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது விளக்கினார்.

அப்போது அவர், “கருணாநிதி சிலை திறப்பு விழாவில் திரளான மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள். ஏற்கெனவே மதுரையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வர நான் ஒத்துக்கொண்டதால் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு செல்ல இயலவில்லை.

மேலும் அவர், “யாரோடு கூட்டணி என்பதை ஊடகங்களிடம் சொல்லமுடியாது..ஊடகத்தின் விருப்பதிற்காக கூட்டணி அமைக்கமுடியாது.மக்கள் நலனுக்கேற்ப கூட்டணி அமைப்போம்” என்று கமல் தெரிவித்தார்.