குஜராத் பள்ளி இறுதி தேர்வு : 63 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை

காந்திநகர்

குஜராத் மாநில பள்ளி இறுதி தேர்வில் 63 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

குஜராத் மாநிலத்தில் பள்ளி இறுதி தேர்வை இந்த வருடம் மார்ச் மாதம் அம்மாநில பள்ளிக் கல்வி மற்றும் மேல் நிலைக் கல்வி வாரியம் நடத்தியது. இந்த தேர்வில் மொத்தம் 8,22,823 மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர்.

இந்த தேர்வு குஜராத்தி மற்றும் ஆங்கில மீடியம் மற்றும் இந்தி மீடியம் ஆகிய மூன்று வழிப் பாடத்திலும் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது.

இந்த தேர்வில் 5,51,023 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்களில் 66.97% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.   சென்ற வருடம் 67.5% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த வருடம் தேர்ச்சி சதவீதம்  மேலும் குறைந்துள்ளது அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதில் ஆங்கில மீடிய மாணவர்கள் 88.11%, இந்தி மீடிய மாணவர்கள் 72.66% மற்றும் குஜராத்தி மீடிய மாணவர்கள் 64.58% தேர்ச்சி பெற்றுள்ளனர். சூரத் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 79.63% மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதல் இடத்தில் உள்ளது,

பழங்குடியினர் அதிகம் உள்ள சோட்ட உதேப்பூர் மாவட்டம் 46.38% மாணவர் தேர்ச்சியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

இம்முறை 366 பள்ளிகளின் மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் 63 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்களில் ஆண்கள் 62.83% மற்றும் பெண்கள் 72.64% தேர்ச்சி பெற்றுள்ளனர்.