டில்லி:

பிசிசிஐ தலைவராக தேர்வாகி உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், தான் எந்தவொரு கட்சியிலும் சேரவில்லை என்று கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை   எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாதது புருவங்களை உயர்த்தியது.

அதுபோல,  இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனும், குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான ஜெய்ஷாவும், பொருளாளராக இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள்  தலைவரும், மத்திய மந்திரியுமான அனுராக் தாகூரின் சகோதரரும், இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க தலைவருமான அருண்சிங் துமாலும், இணைசெயலாளராக கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜூம் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கர்நாடகாவை சேர்ந்த 66 வயதான பிரிஜேஷ் பட்டேல் ஐ.பி.எல். சேர்மனாக போட்டியின்றி தேர்வானார். புதிதாக தேர்ந்து எடுக்கபட்ட நிர்வாகிகள் அக்டோபர் 23 அன்று பதவியேற்கிறார்கள்.

போட்டியில் கலந்துகொண்ட அனைவரும் எந்தவித எதிர்ப்புமின்றி தேர்வு செய்யப்பட்டது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், விரைவில் நடைபெற உள்ள மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில், அந்த மாநிலதத்தை சேர்ந்த கங்குலியை களமிறக்கும் நோக்கில், பாஜக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது. சமீபத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து, இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்று கூறப்பட்டது

இந்த நிலையில்,  தற்போது வரை தான் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.சவுரவ் கங்குலி. மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜியை நான் சந்தித்தபோது இந்த அரசியல் கேள்விகளை நான் எதிர்கொண்டேன் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையில், மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், கங்குலி அரசியலில் சேர்ந்தால் “மேற்கு வங்க அரசியல் செழிக்கும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.