டில்லி,
அயோத்தி, சோம்நாத், கோயில்கள், வேளாங்கன்னி ஆலயம், ராஜஸ்தானிலிருக்கும் அஜ்மீர்செரீப் தர்கா,  உள்பட நாடு முழுவதும் உள்ள 25 ஆன்மிகச் சுற்றுலா தலங்களை மீளுருவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, PRASAD (Pilgrimage Rejuvenation and Spiritual Augmentation Drive ) கமிட்டி பரிந்துரைத்தபடி  நாட்டில் உள்ள மதங்களின் அடையாளங்களாக விளங்கும் 23 கோயில்களை மறு உருவாக்கம் செய்ய மத்திய அரசு தீர்மானித்திருந்தது.  

தற்போது ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ஹஸ்ரத்பால் தர்க்காவும் மற்றும் ராஜஸ்தானிலிருக்கும் அஜ்மீர் ஷெரீப் தர்க்காவும்  அவற்றுடன் இணைக்கப்பட்டு மொத்தம் 25 இடங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இவை எதிர்காலத்தில் வாடிகன், ஜெட்டா போன்று புகழ்பெற்ற இடங்களாக திகழும் என்றும் அமைச்சர் கூறினார்.

மத்திய அரசு அடையாளம் கண்டுள்ள 25 இடங்களில் தமிழ்நாடு, பீஹார் உத்தரகாண்ட் குஜராத், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா 3 திருத்தலங்களும், ஆந்திரா மற்றும்  உ.பி யிலிருந்து தலா இரண்டு திருத்தலங்களும் பஞ்சாப், ராஜஸ்தான் ஒடிசா மே.வங்கம், கேரளா, மத்தியபிரதேசம், மஹாராஷ்ட்ரம் ஜார்கண்ட், அஸ்ஸாம்  ஆகிய மாநிலங்களிலிருந்து   தலா ஒரு திருத்தலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.