சென்னை:

மிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், மெட்ரோ வாட்டர் டாங்கர் லாரிகள் முன்பதிவு செய்யும்  நிறுவனங்கள், காம்ப்ளக்ஸ்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள் தங்களது தண்ணீர் வரியை முழுமையாக செலுத்தியிருந்தால் மட்டுமே, லாரி மூலம் தண்ணீர் வழங்கப் படும் என்றும், தண்ணீர் வரி செலுத்ததாவர்களுக்கு மெட்ரோ வாட்டர் டேங்கர் கிடையாது என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டையொட்டி, பல குடியிருப்புகள், தனியார் லாரிகள் மூலம் குடிதண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தி வந்தன. ஆனால், தனியார் லாரிகள் தண்ணீரின் விலையை பலமடங்கு உயர்த்தியுள்ள நிலையில், குறைந்த விலையில் தண்ணீர் வழங்கி வரும் சென்னை மெட்ரோ வாட்டர் மூலம் தண்ணீர் வேண்டி முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தண்ணீர் தேவை என்றால், நடப்பு ஆண்டிற்கான நீர் வரி மற்றும் நீர் கட்டணங்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளின் நிலுவைத் தொகையை நீங்கள் செலுத்தி இருந்தால் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும், நீர் வரி மற்றும் அது தொடர்பான கட்டணங்களை ஜூன் இறுதிக்குள் செலுத்த வேண்டும். அவர்கள் செலுத்தவில்லை என்றால், ஜூலை முதல் தண்ணீர் டேங்கரை முன்பதிவு செய்ய முடியாது  என்று தெரிவித்து உள்ளனர்.

குழாய் மூலம் தண்ணீர் பெறுபவர்களும், வரும் செப்டம்பர் வரை குடிதண்ணீருக்கான வரியை செலுத்தலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.  மேலும்,  ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் கார்ப்பரேஷன் வரியின் 7% வசூலிக்கப்படும் என்றுகூறிய அதிகாரிகள்,  மீட்டர் இல்லாமல் மெட்ரோ வாட்டர் இணைப்பு கொண்ட ஒரு  வீட்டிற்கு ரூ. 80 தண்ணீர் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் விளக்கினர்.

நடப்பு ஆண்டில் 85% குடியிருப்பாளர்கள் ஏற்கனவே பணம் செலுத்தியுள்ளனர். மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களில், சுமார் 40% குடியிருப்பாளர்கள் இதுவரை இந்த தொகையை செலுத்தி யுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில்  நிலத்தடி நீர்  அளவு,  ஆபத்தான அளவில் குறைந்து வருவதால், பல பகுதிகளில் உள்ள மக்கள் இப்போது கடுமையான நீர் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்  என்றும் தெரிவித்தார்.