அமைச்சர்களுக்கு கொம்பு முளைச்சிருக்கா? வெற்றிவேல் ஆணவப்பேச்சு

சென்னை,

மைச்சர்கள் கூட்டம் கட்சியின் துணைப்பொதுச்செயலாளருக்கு தெரியாமல் நடத்தப்பட்டது. அதற்கு அவர்களுக்கு அதிகாரமில்லை, அவர்களுக்கு கொம்பு முளைச்சிருக்கா என்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறினார்.

இதன் காரணமாக சசிகலா அணி இரண்டாக உடையும் சூழல் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

ரட்டை இலையை தனது அணிக்கு ஒதுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனதாக டிடிவி தினகரன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிமுக இரு அணிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது. இரு அணிகளையும் இணைக்க முக்கிய நிர்வாகிகள் சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருந்து வெளியேறினால் இணைய தயார் என்று ஓபிஎஸ் கூறினார்.

அதைத்தொடர்ந்து தம்பித்துரை எம்.பி. இரட்டைஇலையை மீட்டெடுப்பது அவசியம் என்றும், ஓபிஎஸ் கருத்தை வரவேற்பதாகவும் கூறினார்.

தமிழக மூத்த அமைச்சர்கள் சிலர் தனியாக இதுகுறித்து ஆலோசனை செய்தனர். தொடர்ந்து ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்த நடத்த இரண்டு எம்.பிக்கள் உடன் 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதன் காரணமாக தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையில், டிடிவி தினகரனுக்கு பாதுகாப்பு கொடுத்து வரும், சென்னை தாதாவான வடசென்னை எம்எல்ஏ வெற்றிவேல், ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படவில்லை என கூறினார்.

தினகரனை அவரது அடையாறு வீட்டில் சந்தித்து பேசிய வெற்றிவேல் எம்.எல்.ஏ. நிருபர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது,  “பன்னீர்செல்வம் அணியுடன் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. கருத்து வேறுபாடுகள் இருக்கும். கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டம்தான் அங்கீகாரத்துடன் நடத்தப்படுவதாகும். வேறு யார் வீட்டிலும் நடைபெறும் கூட்டங்கள்  கட்சி கூட்டமாகாது என்றார்.

கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்குத் தெரியாமலேயே அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள் என்றால் எதுவும் பேசி முடிவு எடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு கிடையாது, அமைச்சர்களுக்கு கொம்பு முளைச்சிருக்கா  என்றார்.

ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு எதுவும் அமைக்கப்படவில்லை என்று கூறிய வெற்றிவேல், முதல்வர் பதவி உள்பட 6 முக்கிய அமைச்சர் பதவியை ஓபிஎஸ் கேட்கிறார் என்றதார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் நிபந்தனையை ஏற்க மாட்டோம். வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறது. நாங்கள் யாரிடமும் மண்டியிட மாட்டோம். சசிகலா மற்றும் தினகரன் ஆகிய இருவரும் பொறுப்பில் இருக்க வேண்டும்” என்றார்.

வெற்றிவேலின் இந்த கருத்து டிடிவி தினகரனின் கருத்து என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக சசிகலா அணி இரண்டாக உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.