ராஜினாமா செய்த 19 எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு செல்ல விரும்பவில்லை: ம.பி. காங் தலைவர்

போபால்: ராஜினாமா செய்த 19 எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு செல்ல விரும்பவில்லை என்று மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் சிங் வர்மா கூறியிருக்கிறார்.

மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத்திற்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கியதால் அரசியல் குழப்பம் நிலவியது.  கமல்நாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 6 அமைச்சர்கள் உட்பட 19 எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முடியாததால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

ஆட்சியை தாக்க வைக்க முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் 19 பேரும் பதவியை ராஜினாமா செய்தனர். அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நீடிக்கின்றன.

இந்நிலையில், ராஜினாமா செய்த எம்எல்ஏக்களை மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் சிங் வர்மா சந்தித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜோதிராதித்யா சிந்தியாவுடன் எம்எல்ஏக்கள் யாரும் பக்கபலமாக இருக்கத் தயாராக இல்லை. அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

எம்எல்ஏக்கள் யாரும் பாரதீய ஜனதா கட்சியில் சேர தயாராக இல்லை. எம்எல்ஏக்கள் சிந்தியாவுக்கு ஆதரவாக இருந்தாலும், பாஜகவில் சேர விரும்பவில்லை. பாஜக சிந்தியாவை முதலமைச்சராக ஆக்கினால், இந்த எம்எல்ஏக்கள் விலகி விடுவார்கள் என்றும் கூறினார்.