சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை 2கட்டமாக நடத்த பரிந்துரைக்கவில்லை என்றும், அதுகுறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்தார்.
தமிழகம் , புதுச்சேரி,  அசாம், மேற்குவங்கம் உள்பட உள்பட 5 மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் தேர்தல் ஆணைய உயர்அதிகாரிகள் 2020ம் ஆண்டு டிசம்பர் 21ந்தேதி தமிழகம் வந்து, அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்திச் சென்றனர். அப்போது,  கொரோனா அச்சம் காரணமாக கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில்,  தமிழகத்தில் 2 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக நேற்று (3ந்தேதி) தகவல்கள் வெளியானது.  தமிழக அரசியல் கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்திய நிலையில், 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில், இன்று (4ந்தேதி) செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு,  தமிழக சட்டமன்ற தேர்தலை 2கட்டமாக நடத்துவது தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்ததுடன்,  தமிழக தேர்தல் ஆணையமும் பரிந்துரைக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.