கர்நாடகா: 
டந்த மார்ச் மாதம் கர்நாடக அரசு கேரள எல்லையை மூடியதால் பல இன்னல்களை சந்தித்த கேரள அரசு தற்போது காசர்கோட்டில் உள்ள கர்நாடக எல்லையை மூடி உள்ளது.
கேரளா-கர்நாடகா எல்லையை கடந்த செவ்வாய்க்கிழமை மணல் மற்றும் தடுப்பரண்கள் போட்டு மூடி உள்ளனர் காசர்கோட் மாவட்ட அதிகாரிகள். கர்நாடகாவின் தக்ஷின கன்னடா என்ற இடத்தில் 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் காசர்கோடு அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர். பக்கத்து மாநிலத்தில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாலும்,  எவரும் தகுந்த அனுமதி சீட்டு இல்லாமல் உள்ளே நுழையக்கூடாது என்றும் எல்லையை மூடியதாக காசர்கோடு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவின் தக்ஷிணா கன்னடாவில் மொத்தமாக 825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,  தற்போது 408 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் மொத்தமாக 467 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சில ஊடகங்கள் இதனை பழிக்குபழி என்று சித்தரிக்கின்றனர்,  ஏனென்றால் கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் கர்நாடகா மாநிலம் கேரள எல்லையை மூடியது,  இதனால் தற்போது கேரளாவும் அதையே திரும்ப செய்கின்றனர் என்று ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இதைப்பற்றி காசர்கோடு மாவட்ட காவல்துறை அதிகாரி ஷில்பா திவாவையா கூறியுள்ளதாவது: பல ஊடகங்கள் இதனை பழிக்கு பழி என்று சித்தரிக்கின்றனர். அதுபோல் எதுவுமில்லை….. உண்மை என்னவென்றால் தக்ஷின கனடாவிற்கும் எங்களுக்கும் நல்ல ஒரு உறவு உள்ளது. தற்போதுள்ள நிலையில் பலர் இந்த வழியாக அனுமதி இல்லாமல் உள்ளே நுழைகின்றனர். அதனை தடுக்கும் வகையில் மட்டுமே மணல் மற்றும் தடுப்பரண்கள் போட்டு மூடி உள்ளோம் மற்றபடி ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி திறக்கப்படுகிறது, அதை நாங்கள் தடைசெய்யவில்லை. அவசர தேவைக்காக தகுந்த ஆதாரம் காண்பித்தால் நாங்கள் அனுமதிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் கர்நாடகா கேரள எல்லையை மூடும்போது ஆம்புலன்ஸ்கள் செல்லவும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காசர்கோடு மாவட்ட கலெக்டர் சைத் பாபு கூறியதாவது: இரண்டு மாநிலங்களுக்கிடையே சீல் வைக்கப்பட்டுள்ளது என்று தாங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்,  நாங்கள் வெறும் மணல் மற்றும் தடுப்பரண்கள் போட்டு எல்லை சாலையை மூடி உள்ளோம் அவ்வளவுதான், தற்போதுள்ள கடுமையான  சூழ்நிலையில் இது மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது, பலர் தகுந்த அனுமதி சீட்டு இல்லாமல் உள்ளே நுழைகின்றனர். அவ்வாறு யாரையும் தற்போது அனுமதிக்க முடியாது. நாங்களும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் செயல்படவேண்டும். மேலும் ஆம்புலன்ஸ் அல்லது தகுந்த அனுமதி சீட்டுடன் எவர் வந்தால் மணல்கள் மற்றும் தடுப்பு அரண்கள் நீக்கப்படுகிறது. ஆகையால் இதனை தவறாக புரிந்து கொண்டு தவறாக சித்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் கர்நாடகா, கேரள எல்லையை மூடியபோது கேரளாவில் இருந்து கர்நாடகா மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் 60 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஆம்புலன்ஸில் பிரசவம் நடந்துள்ளது.
கண்ணூர் மற்றும் காசர்கோடில் வசிக்கும் பலர் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள மருத்துவமனையையே நம்பியுள்ளனர். இது தெரிந்தும் கர்நாடகா, கேரள எல்லையை கடந்த மார்ச் மாதம் மூடியது. இந்த விவகாரத்தில் கேரள உயர்நீதிமன்றம் தலையிட்டு கர்நாடகாவிடம் எல்லையை திறக்கச் சொல்லி உத்தரவிட்டது. ஆனால் அதற்கும் அவர்கள் சம்மதிக்காததால் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்று பின் இரு மாநிலங்களுடைய தலைமை செயலாளர்கள் பேசி எல்லையைத் திறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.