சிவகங்கை:  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தமிழகம் முழுவதும் ஆன்லைனில் மாணாக்கர் களுக்கு கல்வி போதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் பாடங்கள் புரியவில்லை என மனம் வருந்திய 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த மாணவி பேச்சுப்போட்டிக்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கைகளால் பதக்கமும், பாராட்டும் பெற்றவர் என்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள் சுபிக்ஷா. இவர் மதுரையில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா முடக்கம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் திறக்கப்படாத நிலையில்,  சுபிக்ஷா , ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்துள்ளார். ஆனால், ஆன்லைன் வழியாக நடத்தப்படும் பாடங்கள் சரியாக புரியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், சந்தே கங்களும் எழுப்ப முடியாத சூழல் இருந்து வருகிறது. இதனால், மனம் உடைந்த சுபிக்ஷா, தேர்வில் அதிக மதிப்பெண்கள் முடியாது என்று கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.  தனது குடும்பத்தினரிடமும், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் பாடம் தனக்கு புரியவில்லை என்று கதறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுபிக்ஷாவின் உடல், தாயின் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்ட அவரது குடும்பத்தினர் பதறியடித்து, மீட்டுள்ளனர்.

சுபிக்ஷாவின் தற்கொலை குறித்து திருப்புவனம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

படிப்பில் சுட்டி மற்றும் பேச்சாற்றல் மிக்க மாணவியான  சுபிக்ஷா ஏராளமான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை குவிந்து வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு மதுரையில்  நடைபெற்ற  எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதல்பரிசை தட்டிச்சென்ற சுபிக்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கரங்களால் பரிசு பெற்று பாராட்டுப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நீட் தேர்வு பயம் காரணமாக பல மாணாக்கர்கள் தற்கொலை முடிவை எடுத்து வரும் நிலையில், தற்போது, ஆன்லைன் மூலம் மாணாக்கர்கள் தற்கொலை முடிவை எடுத்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.