பள்ளிகளை தரம் உயர்த்த பொதுமக்களிடம் பணம் பெறக்கூடாது! தங்கம் தென்னரசு

சென்னை:

மிழக சட்டமன்றத்தில், பேசிய திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, பள்ளிகளை தரம் உயர்த்த பொதுமக்களிடம் பணம் பெறக்கூடாது என்று வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் விவகாரம்  “முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என பதில் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில்  உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு 1 லட்சமும், மேல்நிலைபள்ளியாக உயர்த்துவதற்கு 2 லட்சமும் பொதுமக்கள் திரட்டி கொடுக்கும் நிலை உள்ளது. இந்த பொதுமக்கள் பங்கீட்டு தொகையை அரசே வழங்க வேண்டும் எனவும்  வலியுறுத்தினார்.

மேல்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்த மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.36,000 கோடி ஒதுக்கி இருப்பதை சுட்டிக்காட்டிய தென்னரசு, அதையே தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய  அமைச்சர் செங்கோட்டையன், மலைவாழ் கிராமப்புற பள்ளிகளுக்கு  பொதுமக்கள் பங்கீட்டு தொகையில் விதி விலக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் உறுப்பினரின் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் உறுதியளித்தார்.