முகக்கவசமின்றி வெளியில் நடமாடினால் கொரோனா மையத்தில் வேலை செய்ய வேண்டும்: குஜராத் ஐகோர்ட் அதிரடி

அகமதாபாத்: முகக்கவசம் போடாதவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்களை  கொரோனா மையங்களில் வேலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

உலகின் பல நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து அதிக பாதிப்பை இந்தியா சந்தித்துள்ளது.தற்போது கொரோனா பலி எண்ணிக்கையும், பரவலும் குறைந்து விட்டது.

இதையடுத்து, பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் பலரும்  அலட்சியமாக செல்கின்றனர். இந் நிலையில், இவ்வாறு முகக்கவசம் போடாதவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்களை  கொரோனா மையங்களில் வேலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் இன்றி அதிகம் பேர் நடமாடுவதை சுட்டிக்காட்டி குஜராத் மாநிலத்தில் விஷால் அவதானி என்பவர், அம்மாநில உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார். முகக்கவசம் அணியாதவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரமநாத், நீதிபதி பர்டிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. அவர்கள் தமது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:

பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், தண்டனையாக கொரோனா சிகிச்சை மையத்தில் சேவை செய்ய அரசு உத்தரவிட வேண்டும்.

மருத்துவம் சாராத பணிகளில், குறிப்பாக சுத்தம் செய்தல், சமையல் செய்தல், குறிப்பேடு எழுதுதல் போன்ற பணிகளை செய்ய உத்தரவிட வேண்டும். குறைந்தது 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வேலை செய்ய  உத்தரவிட வேண்டும். இதுகுறித்து மாநில அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும் என்று கூறி உள்ளனர்.