கொல்கத்தா:
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் தடை செய்யப்பட்டதை  கொல்கத்தாவில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியான சோனாகச்சியில் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் வரவேற்றுள்ளனர்.

சோனாகச்சி (கோப்பு படம்)
சோனாகச்சி (கோப்பு படம்)

தெற்காசியாவின் பிரபலமான சிவப்பு விளக்கு பகுதியான சோனாகச்சி மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ததால் அங்கு பாலியல் தொழில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அங்குள்ள பெண்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
இப்பெண்கள், அடுத்த ஒரு வாரத்திற்கு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் வழக்கத்தைவிட அதிகமாக வாடிக்கையாளர்கள் வருவதாகச் சொல்கிறார்கள்.  மேலும், “அதிகமாக பணம் வாங்கும் பாலியல் தொழிலாளிகளுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் 300,400 ரூபாய் வாங்கும் பெண்களுக்குத்தான் பிரச்சினை ஏற்படுகிறது. மீதி சில்லறை பணம் தர முடிவதில்லை. ஆகவே குறைந்தபட்சம் ஐநூறு ரூபாய் என தீர்மானித்துள்ளோம்” என்கிறார்கள்.
இவர்களின் பண வரவு செலவுக்காக கடந்த 2001ம் ஆண்டு உஷா கூட்டுறவு வங்கி துவங்கப்பட்டது. இதை பாலியல் தொழிலாளிகளே நிர்வகிக்கிறார்கள். பெண்களுக்கு மட்டுமான வங்கி இது.
இங்குதான் பாலியல் தொழிலாளிககள் தங்கள் பணத்தை டெபாசிட் செய்வார்கள்.
இந்த வங்கியின் உயர் அதிகாரி சாந்தனு, “பொதுவாக பாலியல் தொழிலாளிகள் தங்கள் வசமே பணத்தை வைத்திருப்பார்கள். சாதாரணமாக, தினமும் ஐந்து லட்ச ரூபாய் எங்கள் வங்கியில் டெபாசிட் செய்யப்படும்  ஆனால் கடந்த சில தினங்களில் சராசரியாக 25 லட்ச ரூபாய் அளவுக்கு டெபாசிட் செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.