கிறிஸ்டி நிறுவன ரெய்டுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:

த்துணவு திட்டத்துக்கு உணவு பொருட்கள் வழங்கி வரும் கிறிஸ்டி நிறுவன ரெய்டுக்கும், தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும்,  முட்டை கொள்முதலில் எந்த விதமான முறைகேடும் நடைபெற வில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

இன்று காலை சென்னை அசோக் நகர் பகுதியில் புதிய மீன் சந்தையை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்து மக்கள் நலத்திட்டங்களை வழங்கி பேசினார்.

அப்போது, தமிழக மீனவர்களால் ஆண்டுக்கு  5 லட்சம் டன் மீன்கள் பிடிக்கப்படுகிறது என்றும், தமிழக கடற்பகுதியில்  மீன்வளம் பெருக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  மீனவர்கள் திசை தெரியாமல் கடலில் எல்லை தாண்டுகின்றனர். அவர்களை இலங்கை அரசு கைது செய்து வருகிறது என்றவர்,  நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது கண்னடத்துக்குரிய என்றார்.

2011ம் ஆண்டு முதல் இன்று வரை 3,010 மீனவர்கள், 388 மீன்பிடி படகுகள்  இலங்கையில் இருந்து  மீட்கப்பட்டுள்ளதாகவும்,  இலங்கை அரசு கைது செய்துள்ள மீனவர்களை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். படகுகள் சேதம் அடைந்திருந்தால் அவற்றுக்கும் உரிய உதவிகள் செய்து தரப்படும் என்றும்  ஜெயக்குமார் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம், கடந்த 2 நாட்களாக சத்துணவு திட்டத்துக்கு உணவு பொருட்கள், முட்டைகள் வழங்கி வரும் கிறிஸ்டி என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருவது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர்,  சத்துணவு திட்டத்துக்காக முட்டை கொள்முதலில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்றும்,  வருமான வரி துறைக்கு கிடைத்துள்ள தகவல்களை அவைத்து அவர்கள் சோதனை நடத்தி வருகிறார்களே ஒழிய, இந்த ரெய்டுக்கும், மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்தார்.

திமுகவில் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடைபெற்று வரும் பனிப்போர் குறித்த கேள்விக்கு,  இவர்களுக்குள் இருக்கும் போட்டியை பார்க்கும் போது, சபாஷ் சரியான போட்டி என்ற வசனம்தான் ஞாபகம் வருவதாகவுமம்,  தமிழ்நாட்டை மோசமாக நிலைக்கு ஆக்கியதே திமுகதான். ஸ்டாலின் தன் மீது ஆயிரம் குற்றங்கள் வைத்துக்கொண்டு மற்றவர்களை குறைக்கூற கூடாது  என்றும் ஜெயக்குமார் கண்டித்தார்.