சென்னை:

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவின் பேட்டியில், அழகிரியால் ஏற்பட்ட சேதத்திற்கு காங்கிரஸ் தலைமை இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

இதைப்பார்க்கும்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரியை தூக்க திமுக முற்படுகிறதோ என்ற  எண்ணம் அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

சோனியா தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி நேற்று கூட்டிய எதிர்கட்சிகள் கூட்டத்தில், கூட்டணி கட்சியான  திமுக கலந்துகொள்ளாது அரசியல் ஆர்வலர்களிடையே உன்னிப்பாக கவனிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான  உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், திமுக தலைமை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு போதுமான இடங்களை ஒதுக்க மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. பின்னர் நடைபெற்ற பஞ்சாயத்து தலைவர் ஒன்றித்தலைவர் மறைமுகத் தேர்தலிலும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்க திமுக மறுத்தது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பல இடங்களில் காங்கிரசாருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக சட்டமன்ற கட்சித்தலைவர்  கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு, தங்களது அதிருப்தியை வெளிப்படையாக வெளிப்படுத்தி இருந்தனர்.

காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டு, திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இதன் காரணமாக இரு கட்சிகளுக்கும் இடையே மறைமுகமாக முட்டல் மோதல் தொடங்கிய நிலையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என சமூக வலைதளங்களிலும் தகவல்கள் பரவின.

இதையடுத்து, தங்களுக்குள் எந்தவித மனக்கசப்பும் இல்லை என்று கே.எஸ்.அழகிரி, மேலிட வற்புறுத்தலைத் தொடர்ந்து  வருத்தம் தெரிவித்தார். ஆனாலும், திமுக தனது பிடிவாதத்தை விட்டுக்கொடுக்காமல், நேற்று டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற  குடியுரிமை திருத்த சட்டம், என்ஆர்சி, ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டது, நாடு முழுக்க நடக்கும் போராட்டம் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதை தவிர்த்தது.

விசிக உள்பட 20 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் திமுக தரப்பில் யாரும் கலந்துகொள்ளாதது அரசியல் விமர்சகர்களின் புருவத்தை உயர்த்த வைத்து.

திமுக நாடாளுமன்றக் கட்சித்தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., டெல்லியில் இருந்த நிலையில், அவர் கூட்டத்தில் பங்கேற்காதது இரு கட்சிகளிடையே உள்ள விரிசல் உண்மையே என்பதை நிரூபணம் செய்தது.

இந்த  பரபரப்பான சூழ்நிலையில்,டி.ஆர்.பாலு எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லையென கே.எஸ்.அழகிரி கூறிய பின் காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்?  என்று கேள்வி விடுத்தார்.

கூட்டணியில் பிரச்சினைகள்  இருந்தால் அது தொடர்பாக  கே.எஸ்.அழகிரி, ஸ்டாலினிடம் நேரில் தெரிவித் திருக்க வேண்டும், அவர் எப்படி  அறிக்கை வெளியிடுவது என்று கேள்வி எழுப்பினார். தங்களது அதிருப்தி குறித்து, காங்கிரஸ் மூத்த  தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கு தகவல் தெரிவித்து விட்டதாகவும்,  அதன் பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல் தங்களிடம் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறியவர்,

ஆனால், கே.எஸ்.அழகிரியின்  அறிக்கையால் ஏற்பட்ட சேதத்தை தவிர்க்க  காங்கிரஸ் தலைமை எதுவும் செய்யவில்லைன்று கூறினார்.

டி.ஆர்.பாலுவின் கேள்வியில் மர்மம் இருப்பதை உறுதி செய்த செய்தியளார்கள்,  திமுகவுடன் காங்கிரஸ் தலைமை நல்லுறவுடன் இருந்துவரும்போது, கே.எஸ்.அழகிரியின் அறிக்கையை ஏன் தீவிரமாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த டி.ஆர்.பாலு, “தமிழகம் குறித்து மட்டுமே  நாங்கள் கவலைப்படுகிறோம், ஏனெனில் இது எங்கள் கட்சிக்கு மிகவும் முக்கியமானது. டெல்லி எங்கள் தேநீர் கோப்பை அல்ல. ” என்று விமர்சித்தார்,.

மேலும், உண்மையில், நாங்கள் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸை மரியாதையுடன் நடத்தினோம், ஆனால்,  கே.எஸ்.அழகிரியின் அறிக்கையால், “எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாகி உள்ளனர் என்றும்,  நிலைமை என்னவாக இருந்தாலும், தி.மு.க சிறுபான்மையினரின் பக்கம் நின்று அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் என்று தெரிவித்தார்.

டி.ஆர்.பாலுவின் இந்த பேட்டி தமிழக அரசியலில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான கே.எஸ்.அழகிரியை, தலைவர் பதவியில் இருந்து நீக்க திமுக தலைமை முயற்சி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது…

திமுகவின் நெருக்குதலுக்கு காங்கிரஸ் தலைமை ஆட்படுமா? என்பது போகப்போகத்தான் தெரிய வரும்….