சென்னை: அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, கொரோனா  அச்சுறுத்தலுக்கு இடையில், முழு கட்டணம் வசூலித்த 14 தனியார் பள்ளிகளுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஐந்தரை மாதங்களாக கல்விநிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போது ஆன்லைன் மூலம் கல்வி போதிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதனால்,பல தனியார் பள்ளிகள் முழு கல்விக்கட்டணத்தை வசூலித்து வருகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 3 தவணைகளாக மட்டுமே கட்டணம் வலிக்க வேண்டும் என்று அரசும்,  சென்னை உயர்நீதி மன்றமும் உத்தரவிட்டது. ஆனால், பல தனியார் கல்வி நிறுவனங்கள் முழு கட்டணத்தையும் செலுத்த மாணவர்களை வலியுறுத்தியதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில்,  இன்று செய்தியாளர்களிடம்  பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா காலகட்டத்திலும் முழுமையாக கல்வி கட்டணத்தை வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

கொரோனாவின் தீவிரம், பெற்றோர் மாணவர்களின் மனநிலை ஆகியவை அறிந்துஅதன் பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் எனவும், செப்டம்பர் 21 முதல் 25 ஆம் தேதி வரை அணிவகுப்பு எதுவும் நடத்தக்கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.