பாரதிராஜா தவிர்த்து நடப்பு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்…!

கடந்த ஆண்டு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் வெளியேறி தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திரையுலகில் நிலவி வரும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என இரண்டிலுமிருந்து அறிக்கைகள் வரத் தொடங்கின.

இந்நிலையில், பாரதிராஜா தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் இணையும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், அதை யாருமே ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தங்களுடைய சங்கத்துக்குப் போட்டியாகச் சங்கம் நடத்துவது முறையல்ல என்று கூறி பாரதிராஜா தவிர்த்து அனைத்து நடப்பு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான விளக்கம் கிடைத்தவுடன் சங்க விதிகளின்படி என்ன செய்யலாம் என்று முடிவு எடுக்கவுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.