17ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைவேன்: திருப்தி தேசாய் சவால்

டில்லி:

பரிமலை அய்யப்பன் கோவில்  மண்ட பூஜைக்காக நாளை திறக்கப்பட உள்ள நிலையில், நாளை மறுதினம்  17ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைவேன் என்று சமூக ஆர்வலரான  திருப்தி தேசாய் பகிரங்கமாக அறிவித்து உள்ளார். என்னை யாரும் தடுக்க முடியாது என்றும் சவால் விட்டுள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியதை தொடர்ந்து பல பெண்கள் கோவிலுக்கு வர முயற்சி செய்து வருகின்ற னர். இதற்கு அய்யப்பன் பக்தர்களிடையே கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே கடந்த பூஜைகளின் போது கோவிலுக்கு வர முயற்சித்த பெண்கள் பலர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில்,  பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் தனது குழுவினருடன் அய்யப்பன் கோவிலுக்குள் 17ந்தேதி நுழைவேன் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பிரதமல்ர மோடிக்கு  கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

கடிதத்தில், ‘நானும் என்னுடன் ஐந்து பெண்களும் வரும் 17ஆம் தேதி சபரிமலைக்கு செல்ல விருக்கின்றோம். எங்களை யாரும் தடுக்க கூடாது, நாங்கள் சாமி தரிசனம் முடிந்து கேரளாவில் இருந்து செல்லும் வரை தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்றும் கோரி உள்ளார்.

இந்த நிலையில், உச்சநீதி மன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி,  வீம்புக்காக பெண்கள் சபரி மலைக்கு வர வேண்டாம்.. என்றும்,  வீம்புக்கு வரும்  பெண்களின் காலில் விழுந்து கோயிலின் விதிமுறைகளை மீற வேண்டாம் என்று அறிவுறுத்துவோம் என்றும் சபரிமலை கோவில் தந்திரிகள் கூறி உள்ளனர்.

திருப்தி தேசாய் ஏற்கனவே மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்ஹாவில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கேரளாவில் சபரிமலை விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், திருப்தி தேசாயின் பகிரங்க அறிவிப்பு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்மிக பூமியான சபரிமலை கலவர பூமியாக மாறும் வாய்ப்பு உருவாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.