சென்னை: வரும் 27ம் தேதி மெரினாவுக்கு நேரில் வர தயார், என்னை எதிர்கொள்ள தயாரா என்று திருமாவளவனுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சவால் விடுத்திருக்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் நடத்திய மாநாடு ஒன்றில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அயோத்தி தீர்ப்பு பற்றி பேசினார். அப்போது இந்து கோயில்கள் பற்றி அவர் ஒரு கருத்தை தெரிவித்தார்.


இதற்கு பாஜக பிரமுகரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் சர்ச்சையாக விமர்சித்து இருந்தார். அவரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில், விடுதலை சிறுத்தைகள் போராட்டம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருக்கிறார் காயத்ரி ரகுராம். அவர் கூறி இருப்பதாவது: திருமாவளவன் இந்து மதத்தை தொடர்ந்து விமர்சித்து பேசி வருகிறார். தற்போது அவரது ஆட்களை விட்டு தம்மை தொந்தரவு செய்கின்றனர்.


இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் அச்சப்பட போவதில்லை. தமது மதத்திற்காகவும், நாட்டிற்காகவும் உயிரை கூட கொடுக்க தயார் என்று கூறி இருந்தார். மற்றொரு பதிவில், வரும் 27ம் தேதி, மெரினா கடற்கரைக்கு காலை 10 மணிக்கு நான் வருகிறேன்.
தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டுங்கள். திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன். வெளிப்படையாகவே என்னை அவர் துன்புறுத்துகிறார். இதை நான் இப்படியே விடப்போவதில்லை.
மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன். போலீசில் புகார் அளிப்பேன். பார்க்கலாம் இதுபோன்ற குண்டர்கள் எல்லாம் எவ்வளவு நாட்களுக்கு தான் எம்பி ஆக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.