சென்னை:

வம்பர் 1ந்தேதி ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாடப்படும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

1956ல் தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினத்தை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 110 விதியின் கீழ் கூட்டுறவு, பொதுப்பணித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் அறிவித்து இருந்தார். அதன்படி தற்போது அரசாணை வெளியிடப்பபட்டு உள்ளது.

தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 1956 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளம் ஆகிய மொழிவாரி மாநிலங்கள் நவம்பர் 1 ஆம் தேதி பிரிந்து சென்றன. இந்த நாளை அந்த மாநிலங்களில் மாநிலம் பிறந்த நாளாக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் அடிப்படையிலும் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.  ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அந்த வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்படும் என்ற மாபெரும் சிறப்பு அறிவிப்பினை முதல்வர் அறிவித்தார்.

மேலும், தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் இருக்கை அமைக்கப்படும். திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் 1 ஆம் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு தினமாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்நாளினை கொண்டாடுவதற்காக, ரூ 10 லட்சம் நிதியையும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.