நவம்பர்16: இன்று தேசிய பத்திரிகை தினம்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து

சென்னை:

ந்தியாவில் பிரஸ் கவுன்சில் தொடங்கப்பட்ட நாளான இன்று தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் ‘பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா’ அமைப்பு 1966, நவம்பர் 16ல் நிறுவப்பட்டது.  அதைத்தொடர்ந்து  நவம்பர் 16ந்தேதி ஆண்டுதோறும் தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஜனநாயகத்தின் நான்காவது துாணாக கருதப்படும் பத்திரிகைகளின் பணி சமுதாயத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அரசியல் விருப்பு வெறுப்பின்றி , தொழில்முறை நெறிகளை கட்டிக்காத்தல், செய்திகளை பாரபட்சமின்றி வழங்குவது, தவறுகளை   சுட்டிக்காட்டுவது, சமூகத்திற்கு சரியான பாதைகளை தெளிவுபடுத்து போன்ற பணிகளை பத்திரிகைகள் செய்து வருகின்றன.

எடப்பாடி வாழ்த்து

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள.வாழ்த்து செய்தியில், ஜனநாயகத்தை கட்டிக்காப்பதில், முக்கிய பங்காற்றும் பத்திரிகை மற்றும் காட்சி ஊடக துறையின் பணிகளை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர், 16ம் தேதி, தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் நபர்களுக்கு வாழ்த்துகள்.பத்திரிகையாளர்களுக்காக, பத்திரிகையாளர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், குடும்ப உதவி நிதி, பத்திரிகையாளர் நல நிதியம் உட்பட, பல்வேறு நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது.அரசு செயல்படுத்தி வரும், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்த செய்திகளை, மக்களிடம் எடுத்து செல்லும் பணியை செய்து வரும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு, தேசிய பத்திரிகை தின வாழ்த்துகள்.இவ்வாறு,

முதல்வர் கூறியுள்ளார்.