நவம்பர்-1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’: சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவிப்பு

சென்னை:

மிழகத்தில் நவம்பர்-1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’  கொண்டாடப்படும் என்று தமிழக சட்ட மன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தின் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில்,  தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர்-1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

வாரணாசி இந்து பல்கலைக் கழகம், கவுகாத்தி பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இயங்கிவரும் தென்னிந்திய மொழிகள் துறையில் தலா ஒரு தமிழ் உதவிப் பேராசிரியர் பணியிடம் ஏற்படுத்தப்படும்.

ஆண்டுதோறும் ஒரு இந்திய மொழி மற்றும் ஒரு உலகமொழி ஆகியவற்றில் திருக்குறள் மொழியாக்கம் செய்து வெளியிடப்படும்.

“தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல்” பெயரில் தமிழ் ஆய்விருக்கை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்படும்.

ஒருங்கிணைந்த உயர்கல்வி வளர்ச்சித் திட்டத்தின் கீழ், முதன்முறையாக தமிழ் பல்கலைக் கழகத்தில் 20 கோடி ரூபாய் நிதியில் புதிய கட்டுமான வசதிகள், மேம்பாடு மற்றும் வளர்ச்சிப் பணிகள் என முதலமைச்சர் அறிவித்தார்.

பட்டியலிடப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும், மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாணவர் ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதற்கட்டமாக 100 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் 3,000 கால்நடை அலகுகளுக்கு மேல் இருக்கும் 75 கிராமங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள், தலா 4 லட்சம் ரூபாய் வீதம், 3 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

5,000 கால்நடை அலகுகளுக்கு மேல் இருக்கும் 25 கிராம பஞ்சாயத்துகளில் புதிய கால்நடை மருந்தகங்கள், தலா 14 லட்சம் ரூபாய் வீதம் 3.50 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

ஐந்து கால்நடை மருந்தகங்கள் தலா 50 லட்சம் ரூபாய் வீதம், 2.50 கோடி ரூபாய் செலவில் கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். இரண்டு கால்நடை மருத்துவமனைகள் மற்றும்

பெரு மருத்துவமனைகள், 24 மணி நேரமும் இயங்கும் பன்முக மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தப்படும்.

இவ்வாறு பல்வேறு அறிவிப்புகளை வாசித்தார்.