லகநாயகன் கமல்ஹாசன் தனது 65 வது பிறந்த நாளை இன்று (நவம்பர் 7) கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கலையுலக பிரபலங்கள், ரசிகர்கள்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு இன்று 65வது பிறந்தநாள்.  இன்று முதல்  3 நாட்கள் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கமலின் பிறந்த தினத்தன்று அவரது தந்தையின் நினைவு தினம் ஆகும். இந்த ஆண்டு அவர் தனது பிறந்தநாளை சொந்த ஊரான பரமக்குடியில் கொண்டாடுகிறார். இதையொட்டி, இன்று (7ந்தேதி) அங்கு அவரது  தந்தையார் டி.சீனிவாசனின் சிலையை திறக்கப்படுகிறது.

8 ஆம் தேதி தனது குரு கே.பாலச்சந்தரின் உருவச் சிலையை சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷல் நிறுவன அலுவலகத்தில் திறக்கிறார்.

9 ஆம் தேதி இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியின்போது,  நண்பர்கள் தொண்டர்கள்,  ரசிக பெருமக்கள் எந்தவிதத்திலும் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையில் பேனர்கள், ஃபிளெக்ஸ் மற்றும் கொடிகள் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும் ஏற்கனவே அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில், அவரது பிறந்தநாள் இன்று ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

னது 5 வயதில் ‘களத்தூர் கண்ணம்மா’ படம் மூலம் நடிக்க வந்த கமல்ஹாசன் இந்த வருடத்துடன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில் குற்றவியல் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் மகனாக பிறந்தவர் கமல்ஹாசன். நான்கு குழந்தைகளில், கடைக்குட்டியாகப் பிறந்த கமலுக்கு, இளம் வயதிலிருந்தே, படிப்பைத் தவிர மற்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருந்ததால், மிகுதியான நேரத்தை அதில் செலவிட்டார்.

சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி ரகு இவருடைய உடன் பிறந்தவர்கள். கமல் அவர்களின் தந்தை, கட்டுப்பாடு மிகுந்தவராக இருந்ததால், தனது மகன்களை நன்குப் படிக்க வைக்க எண்ணினார். அவரின் எண்ணத்திற்கேற்ப, கமலின் மூத்த சகோதரர்கள் இருவரும் தனது தந்தையை உதாரணமாகக் கொண்டு, சட்டம் பயின்றனர்.

ஆனால், கமல்ஹாசன்,  தனது  நடிப்புத் திறமை காரணமாக, ‘உலகநாயகன்’ என்று ரசிகர்களிடம் பட்டத்தைப் பெற்றுள்ள கமல்ஹாசன், இதுவரை 200க்கும்  மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வாழ்க்கை முழுவதையும் திரைத்துறைக்கே அர்பணித்த கமல்  நான்கு முறை தேசிய விருதும், பதினெட்டு முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றுள்ளார்.

1978ல், வாணி கணபதி என்பவரை மணமுடித்த கமல்ஹாசன், பத்து ஆண்டுகள் கழித்து அவரிடம் விவாஹரத்துப் பெற்று, சரிகா என்ற நடிகையை மணமுடித்தார். அவர்களுக்கு, ஷ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா என்ற மகள்கள் உள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் சிறந்த நடிகர் மட்டுமின்றி திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி பல படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன் சிறந்த மொழிப்புலமை பெற்றவர். தமிழகத்தில் பேசப்படும் சென்னை தமிழ் முதல் கொங்கு தமிழ் வரை அத்தனை தமிழையும் அசால்ட்டாக பேசி ஆச்சரியப்படச் செய்வார். அதுமட்டுமின்றி, தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பெரும்பாலான இந்திய மொழிகளை பேச வல்லவர்.

தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தாலும், எழுத்துத் திறனாலும் ‘மையம்’ என்ற பத்திரிக்கையை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவ்விதழைக் ‘கமல்ஹாசன் நற்பணி மன்றம்’ இயக்கி வருகிறது. தனது ரசிகர் சங்கம் மூலமாக, சினிமா, குழந்தை வசவு, காஷ்மீர் மோதல், போதை மருந்துப் போன்ற சமுதாயப் பிரச்சனைகளை, தனது புத்தகமான ‘தேடித் தீர்ப்போம் வா’ என்ற தலைப்பில் சேகரித்து வெளியிட்டார்.

‘கமல் நற்பணி இலக்கியம்’ என்ற அமைப்பின் கீழ் பல சமுதாயப் பொது நல அமைப்புகள் அமைத்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள், அவரது ரசிகர்கள். ஏழை எளியோருக்கு உதவுவது, பள்ளிக் குழந்தை களுக்குப் புத்தகம், கணினிப் போன்றவற்றை வழங்குவது போன்ற நற்பணிகளும் செய்கிறார்கள். ஹ்ருதயராகம் 2010 என்ற திட்டத்தின் தூதராக இருந்த அவர், எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதன் பொருட்டாக ஒரு அனாதை இல்லத்தை அமைத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண நிதித் திரட்டி, சென்னை போரூரிலிருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 2010ஆம் ஆண்டு வழங்கினார்.

கடந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் 21ந்தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கி அரசியல் பணியாற்றி வருகிறார்.