பாஜகவுக்கு தாவிய ஜேடிஎஸ் எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு! தொண்டர்கள் ஆவேசம்

மைசூரு:

குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க காரணமாக இருந்த மதசார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏக்களில் ஒருவரான நாராயண கவுடாமீது, ஜேடிஎஸ் கட்சித் தொண்டர்கள் செருப்பு வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில், ஜேடிஎஸ் கட்சித்தலைவர் குமாரசாமி தலைமையில், மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆட்சியை கவிழ்க்க பாஜக தரப்பில் ஆபரேசன் தாமரை என்று அறிவிக்கப்பட்டு, அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு வலைவீசப்பட்டது. இதில், ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் சிக்கியதைத் தொடர்ந்து குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.  பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதையடுத்து எடியூரப்பாக தலைமையில் பாஜக ஆட்சி பதவி ஏற்றது.

இந்த நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதுபோல, தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றமும், அவர்களின் தகுதி நீக்கம் சரியே என்று கூறியதுடன், இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை என்றும் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்ததைத் தொடர்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட  13 பேர் பாஜக சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கடந்த வருடம் நடந்த பொதுத்தேர்தலில் மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட் தொகுதியிலிருந்து மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாராயண கவுடா. இவர் தற்போது பாஜகவில் சேர்ந்துள்ள நிலையில், இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது, அங்குவந்த  மதசார்பற்ற ஜனதாதளம் தொண்டர்கள்  செருப்புகளை  வீசி  ரகளையில் ஈடுபட்டனர். நாராயண கவுடா குடும்பத்தினர் மீது செருப்புகள் வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காவலர்கள் விரைந்து வந்து நாராயணகவுடாவுக்கு பாதுகாப்பு அளித்தனர். இதுகுறித்து கூறிய நாராயண கவுடா,  இந்த தொகுதி மக்களுக்கு நான் சிறப்பாக பணியாற்றியுள்ளேன். அவர்கள் எனக்கு மறுபடியும் ஓட்டு போடு வார்கள் என்று கூறியவர், என் மீது  செருப்புகளை வீசும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த சம்பவம், மீண்டும் தேர்தலில் களமிறங்கி உள்ள மற்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.