சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதத்தை தபாலில் அனுப்ப ஏற்பாடு

சபரிமலை:
பரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதத்தை, அனைத்து மாநில பக்தர்களும் தபாலில் பெற்றுக் கொள்ள, தேவசம் போர்டு ஏற்பாடு செய்து உள்ளது.

கொரோனா பரவலால், சபரிமலை மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனில் பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதாவது, கொரோனா பரிசோதனைக்கு பின், தினமும், 1,000 பேர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், 2,000 பேர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான பக்தர்கள், அய்யப்பனை தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

இதனால், பிரசாதத்தை தபாலில் பெற்றுக் கொள்ளலாம் என, தேவசம் போர்டு அறிவித்துள்ளது. தபால் துறையினருடன், தேவசம் போர்டு தலைவர் என்.வாசு, கமிஷனர் பி.எஸ்.திருமேனி ஆலோசனை நடத்தி, இந்த முடிவை எடுத்துஉள்ளனர்.

இதன்படி, அருகேயுள்ள தபால் நிலையத்தில் பணம் டிபாசிட் செய்து, முகவரி பதிந்தால், அடுத்த சில நாட்களில், பிரசாதம் பார்சலாக வீட்டிற்கு வரும். இதில், அரவணை, அப்பம், நெய், குங்குமம், விபூதி, மஞ்சள் இருக்கும். ‘கட்டணம் தொடர்பாக, இன்னும் ஒருசில நாட்களில் அறிவிப்பு வெளியாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.