நிறவெறி புகாரில் இப்போது டேரன் சமி – ஒவ்வொன்றாக கிளப்பும் ஜார்ஜ் பிளாய்ட் மரணம்!

கிங்ஸ்டன்: ஐபிஎல் தொடரின்போது இனரீதியான பாகுபாட்டை தான் சந்தித்ததாக கூறியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி.

கடந்த 2013-14ம் ஆண்டுகளில் ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்தார் டேரன் சமி. அப்போது இவரை ‘காலு’ என்று அழைத்துள்ளனர். ஆனால், அதற்கு வேறு அர்தத்தை எடுத்துக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் சமி.

இவரை மட்டுமல்லாது, இலங்கையின் திசாரா பெரராவையும் அவ்வாறு அழைத்துள்ளனர்.

இதுகுறித்து தற்போது டேரன் சமி கூறியுள்ளதாவது, “ஐபிஎல் தொடரில் ஐதரபாத் அணியில் நான் இடம்பெற்று விளையாடியபோது, என்னையும், இலங்கையின் திசாரா பெராராவையும், ‘காலு’ என்று அழைத்தனர். சக்திவாய்ந்த கருப்பு மனிதர் என்ற பொருளில்தான் இவ்வாறு அழைப்பதாக நான் அப்போது நினைத்தேன்.

ஆனால், அதன் உண்மை அர்த்தம் இப்போதுதான் தெரிகிறது. என்னை கேலியாக அழைத்துள்ளனர் என்று நினைக்கையில் கோபம் வருகிறது” என்றுள்ளார்.

வடஇந்தியாவில், கருப்பாக இருப்பவர்களை, இந்தியில் காலு என்று கிண்டலாக அழைப்பார்களாம்! இதை ‘பேட்ரியாட் ஆக்ட்’ என்ற இணையதள நிகழ்ச்சியின் மூலம் இதை அறிந்துகொண்டுள்ளார் டேரன் சமி.