இப்போ இன்னொரு நடிகரின் காலம்.. விஜய்யை சொல்கிறாரா ரஜினி?

சென்னை:

ப்போது இன்னொருத்தருக்கு காலம் என்று ரசிகர்களுடனான இன்றைய நான்காம் நாள் சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தது, பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று நான்காவது  நாளாக தனது ரசிகர்களை ரஜினி சந்தித்துக்கொண்டிருக்கிறார்.

இன்று… கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்திக்கிறார்.

இன்றைய கூட்டத்தில் அவர் பேசியதாவது: “கோவையை பற்றி நினைக்கும்போது ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது. அண்ணாமலை திரைப்படம் வெளியான நேரம்… நானும், சிவாஜி சாரும் கோவை விமான நிலையத்திற்கு ஒரு விஷயமாக சென்றிருந்தோம். இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அண்ணாமலை படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக  தமிழகம் முழுக்க ஓடிக்கொண்டிருந்த நேரம். அப்போது விமான நிலையத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கான பேர் கூடிவிட்டனர். ரசிகர்களை பார்த்ததும் எனக்கு பதற்றம்!

உங்களை பற்றித்தான்  எனக்குத் தெரியுமே… ரஜினி வாழ்க என கோஷம் போட ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள். அத்தனை ரசிகர்களை ஒன்றாக பார்த்தபோது, எனது உடம்பு மீது பாம்பு ஏறியதை போல பதற்றமாகிவிட்டது.

நடையின் வேகத்தை குறைத்தேன். அப்போது சிவாஜி சார் என்னை பார்த்து, “எங்க நெளியிற, முன்னாடி வா..” என்று என் கையை பிடித்து இழுத்தார்.

அதோடு, “நாங்கெல்லாம் நடிச்சி பெயர் வாங்கியாச்சி. இப்போ உன் காலம். அங்க பார்த்து கையை அசை, இந்த பக்கம் பார்த்து கையை காண்பி” என்று சிவாஜி சார் எனக்கு சொல்லிகொடுத்தார்.

சில மாதங்களுக்கு முன் கோவையில் சாமியார் ஒருவரை பார்க்க சென்றேன். அப்போது இன்னொரு நடிகர் அங்கே போயிருந்தார். அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை.

“அந்த நடிகரை பார்க்க கூட்டம் கூடிவிட்டது. ஆகவே இப்போது நீங்கள் சாமியார் ஆசிரமத்துக்கு வர வேண்டாம்” என்று எனக்கு சாமியார் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டது.

அப்போது எனக்கு சிவாஜி சார் சொன்னதுதான்  நினைவுக்கு வந்தது. இப்போது இன்னொருத்தருக்கு காலம். காலம் மாறிக்கொண்டே இருக்கும்” என்று  ரஜினிகாந்த் பேசினார்.

தனது காலம் முடிந்துவிட்டது என்ற பொருளில் ரஜினி பேசியிருப்பதன் மூலம், அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை சூசகமாக தெரிவிக்கிறார் என்று ஒரு யூகம் எழுந்துள்ளது.

 

“இன்னொரு நடிகரின்  காலம் வந்துவிட்டது என்று அவர் யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை… கோவை சாமியார் என்றால்  கோவை ஆனைகட்டியில் இருக்கும் தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமம்தான்.  இங்கு சில சமயங்களில் விஜய் வந்து செல்வதாக சொல்லப்படுவது உண்டு. ஆகவே  இது விஜய்யின் காலம் என்று ரஜினி சொல்கிறாரோ.. “ என்ற யூகமும் எழுந்துள்ளது.

நடிகர் விஜய்யும் அரசியலில் ஆர்வத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.