பாட்னா:

சிங்கம், புலிகளுக்கு மட்டுமே பயந்து வந்த மக்களை மாடுகளை பார்த்து பயப்பட வைத்த பெருமை பிரதமர் மோடியை சேரும் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் சரன் மாவட்டம் சோனேப்பூர் கால்நடை கண்காட்சி நடந்தது. இதில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், ‘‘கால்நடைகளின் மீது மக்களுக்கு ஏற்பட்ட பயம்  காரணமாக ஆசியாவின் மிகப்பெரிய கண்காட்சியான இது தற்போது கால்நடைகள் இல்லாத கண்காட்சியாக மாறிவிட்டது.

முன்பெல்லாம் மக்கள் சிங்கம், புலிகளை பார்த்து தான் பயப்படுவார்கள். மாடுகளை பார்த்து பயப்படும் நிலையை பசு பாதுகாவலர்கள் ஏற்படுத்தி விட்டனர். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவிக்க வேண் டும்’’ என்றார்..

மேலும், அவர் பேசுகையில், ‘‘ பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி காரணமாக மக்கள் கவலை அடை ந்துள்ளனர். அதனால் மோடி 2019ம் ஆண்டு வரை காத்திருக்காமல் 2018ம் ஆண்டிலேயே நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அவர்களது கட்சியினரையும் இதற்கு தயார்படுத்த வேண்டும்.

எப்போது தேர்தல் நடந்தாலும் எதிர்கட்சிகள் பாஜக.வை வீழ்த்த வேண்டும். எனது மகன் தேஜாஸ்வீ மற்றும் ஹர்தீக் படேல் போன்ற இளம் தலைவர்கள் மதவாதத்தை வேறோடு அழிக்க வேண்டும். எதிர்கட்சிகளை குறிவைப்பதை விட்டுவிட்டு மோடி மற்றும் பாஜக செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஆளுங் கட்சியையும், அதன் தலைவர்களையும் தான் மீடியாக்கள் எதிர்த்து செய்தி வெளியிடுகின்றன. ஆனால், இந்தியாவில் எதிர்கட்சிகளுக்கு எதிராக மீடியாக்கள் செயல்ப டுகிறது. இது மாற வேண்டும்’’ என்றார்.