வைகோவை மலேசியா தடுப்பது இது முதல் முறை அல்ல

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை, மலேசியா நாட்டிற்குள் வரக்கூடாது என்று தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. அங்குள்ள பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமண வரவேற்பில் கலந்துகெள்ள சென்ற வைகோவை, விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திவிட்டது மலேசிய அரசு.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வைகோ வருகைக்கு மலேசிய அரசு தடை போடுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2015ம் நாட்டில் மலேசியாவின் பினாங்கில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் பற்றிய கருத்தரங்கம் நடந்தது.

அதில் கலந்துகொள்ள வைகோ விசா கேட்டு, மலேசிய தூதரகத்தில் விண்ணப்பித்தார். அப்போது விசா வழங்க மலேசிய தூதரகம் மறுத்தது. ஆனால் தனது மறுப்பை வெளிப்படையாகச் சொல்லாமல் தாமதம் செய்தது.
இதன் பின்னணியில் இலங்கை இருந்ததாக அப்போது பேச்சு எழுந்தது.

பிறகு பினாங்கு முதல்வர் லிம் குவன் எங் மற்றும் துணை முதல்வர் ராமசாமி ஆகியோர் முயற்சியில் விசா கிடைத்து, மலேசியா சென்றார் வைகோ.
அந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட பினாங்கு முதல்வர் லிம் குவன் எங், இது குறித்து பேசினார்.

“ திரு வைகோ அவர்கள் இந்தக் கருத்து அரங்கில் பங்கேற்கக் கூடாது என்பதற்காக அவருக்கு விசா தருவதைத் தடுக்க முயன்றார்கள். இனி அவர் மலேசியா வருவதை யாரேனும் தடுக்க முயன்றால் அவரை பினாங்கு மாநில அரசின் சிறப்பு விருந்தனராக அழைப்போம். அப்போது அவரது வருகையை யாராலும் தடுக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.
அப்போது வைகோவுக்கு தடை போட முயற்சித்ததன் பின்னணியில் இலங்கை இருந்ததாக பேசப்பட்டது.